தமிழ்நாடு

tamil nadu

சென்னை - மைசூரு இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்.. புறப்படும் நேரம், நிறுத்தங்கள் விவரம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 11:18 AM IST

Updated : Mar 12, 2024, 1:24 PM IST

Chennai Mysuru Vande Bharat Express: சென்னை - மைசூரு இடையே கூடுதலாக வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்திருந்த நிலையில், இன்று இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

PM Modi inaugurated the chennai to Mysore Vande Bharat train
சென்னை - மைசூர் வந்தே பாரத் ரயில் சேவை

சென்னை: இந்தியாவில் முக்கிய நகரங்களுக்கு இடையே விரைவாகச் செல்வதற்காக வந்தே பாரத் ரயில்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தென்னக ரயில்வே சார்பாக, சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர், மைசூரு, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கும், சென்னை எழும்பூரிலிருந்து நெல்லை, திருவனந்தபுரம், காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

வந்தே ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை - மைசூரு இடையே கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயில் மார்ச் 12 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாகவும், இச்சேவை ஏப்ரல் 4ஆம் தேதி வரை சென்னை - பெங்களூரு இடையே மட்டும் இயக்கப்படும் என்றும், ஏப்ரல் 5ஆம் தேதிக்கு மேல் மைசூரு வரை செல்லும் எனவும் தென்னக ரயில்வே தெரிவித்திருந்தது.

அந்த வகையில், சென்னை - மைசூரு இடையேயான வந்தே பாரத் ரயிலை காணொலி வாயிலாக பிரதமர் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். மேலும் சென்னை சென்ட்ரல் நடந்த சென்னை - மைசூரு இடையேயான 2வது வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில், ஆளுநா் ஆா்.என்.ரவி, மத்திய இணையமைச்சா் எல்.முருகன் ஆகியோா் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் சுமார் ரூ.85 ஆயிரம் கோடிக்கு அதிகமாக திட்டங்களைப் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வந்தே பாரத் ரயிலானது வாரந்தோறும் புதன்கிழமை தவிர்த்து, தினமும் காலை 6 மணிக்கு மைசூரிலிருந்து புறப்பட்டு (வ.எண்: 20663) பிற்பகல் 12.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் (வ.எண்: 20664) காட்பாடி, ஜோலாா்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், மாண்டியா வழியாக இரவு 11.20 மணிக்கு மைசூரு சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி கொல்லம் - திருப்பதி இடையேயான புதிய ரயில் சேவையையும், சென்னை - மைசூரு இடையே கூடுதலாக ஒரு புதிய வந்தே பாரத் ரயில், லக்னெள - டேராடூன், கலபுா்கி - பெங்களூரு, ராஞ்சி - வாரணாசி, தில்லி (நிஜாமுதீன்) - கஜுரஹோ, செகந்திராபாத் - விசாகப்பட்டினம், நியூ ஜல்பைகுரி - பாட்னா, லக்னெள - பாட்னா, அகமதாபாத் - மும்பை, புரி - விசாகப்பட்டினம் ஆகிய 10 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.

இதுதவிர்த்து, திருவனந்தபுரம் - காசர்கோடு இடையிலான வந்தே பாரத் ரயில், மங்களூரு வரை நீட்டிக்கப்படவுள்ளது. சுமார் 200க்கும் மேற்பட்ட ரயில்வே மேம்பாலங்கள், ரயில் இன்ஜின் பராமரிப்புக்கான 40 பணிமனைகள், 50 மலிவு விலை மருந்தகங்கள் ஆகியவற்றையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி; நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியீடு!

Last Updated :Mar 12, 2024, 1:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details