தமிழ்நாடு

tamil nadu

வேங்கை வயல் விவகாரம்; 3 நபர்களுக்குக் குரல் மாதிரி பரிசோதனை செய்ய சிபிசிஐடி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 8:29 PM IST

Vengaivayal Issue: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் விவகாரத்தில் மேலும் மூன்று நபர்களுக்குக் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

Vengaivayal Issue
Vengaivayal Issue

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் 3 நபர்களுக்குக் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள இன்று(மார்ச்.15) புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான சாட்சியங்களைச் சமர்ப்பிக்க வேண்டி உள்ளதால், குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும், சம்பவம் நடந்தபோது வாட்ஸ் ஆப் தளங்களில் பகிரப்பட்ட ஆடியோக்களின் அடிப்படையில், இந்த குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும், இதன் முடிவுகள் வரும் பட்சத்தில் இந்த வழக்கு அடுத்த கட்டத்திற்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்து உடனடியாக அப்போதைய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் இறையூர் வேங்கை வயல் பகுதிக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து, பட்டியல் இனத்தைச் சேர்ந்த பொது மக்களிடம் விசாரணை நடத்தினார்.

மேலும், குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், விரைவு தன்மை இல்லை என்று பல்வேறு தரப்பினர் அறிவுறுத்தி வந்த நிலையில், இந்த வழக்கை டிஜிபி சைலேந்திரபாபு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இதனையடுத்து டிஎஸ்பி பால் பாண்டி தலைமையில் 35 சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் ஒரு வருடங்களைக் கடந்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்ற சூழலில் இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான விசாரணைக்குத் திட்டமிட்ட சிபிசிஐடி போலீசார் 5 சிறுவர்கள் உட்பட 31 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனையும், இரண்டு பேருக்குக் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொண்டனர்.

இவர்களிடம் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில், வேங்கை வயல் குடிநீர்த் தொட்டியில் சேகரிக்கப்பட்ட மாதிரியுடன், ரத்த மாதிரிகள் ஒத்துப் போகவில்லை என சோதனையில் தெரியவந்தது.

இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் அடுத்தகட்ட முயற்சியாக வேங்கை வயல் மற்றும் இறையூர், முத்துக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீது பல கட்ட விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கும்பகோணத்தில் 10 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details