தமிழ்நாடு

tamil nadu

ராட்சத பம்புகள் மூலம் நீரை வெளியேற்ற எதிர்ப்பு.. சேலம் மேக்னசைட் நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்! - TN magnesite water issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 12:31 PM IST

TN Magnesite water issue: தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படவுள்ள தண்ணீரை கிராம மக்களின் பயன்பாட்டிற்காகவும் வழங்க வேண்டும் எனவும், நிலத்தடி நீரை ராட்சத பம்புகள் மூலம் வெளியேற்றக் கூடாது எனவும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தை வலியுறுத்தி பொதுமக்கள் மனு வழங்கியுள்ளனர்.

people petition about Water scarcity in Tamil Nadu Magnesite Industry at Salem
people petition about Water scarcity in Tamil Nadu Magnesite Industry at Salem

சேலம்: சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையத்தில் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் (Tamil Nadu Magnesite Industry) ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு, சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்தைச் சேர்ந்த தேக்கம்பட்டி, மூங்கில் பாடி, வெள்ளாளப்பட்டி, கொல்லப்பட்டி, சக்கரைசெட்டிப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஓமலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மணியுடன் நேற்று புகார் மனுவுடன் வந்திருந்தனர்.

அதில், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்திற்குச் சொந்தமான சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படவுள்ள தண்ணீரை கிராம மக்களின் குடிநீர் தேவைக்காகவும், விவசாய பயன்பாட்டிற்காகவும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தை வலியுறுத்தி மனு வழங்கியுள்ளனர்.

அப்போது பேசிய கிராம மக்கள், "தேக்கம்பட்டி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில் நாங்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகிறோம். எங்களது கிராமங்களில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். எங்களின் வாழ்க்கைத் தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்தலை நம்பியே உள்ளது. இந்நிலையில், குடிநீர் தேவை மற்றும் விவசாயம் செய்வதற்கான தண்ணீர் எங்களுக்கு போதிய அளவில் இருப்பு இல்லை.

கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக சரிந்து வருகிறது. இந்த நிலையில் தேக்கம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் சுரங்கத்தில் உள்ள நிலத்தடி நீரை வெளியேற்ற நிர்வாகம் உயர் அழுத்தம் கொண்ட ராட்சத பம்புகள் அமைத்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த ராட்சத பம்புகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டால் மேக்னசைட் சுரங்கத்திலிருந்து, சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2,500 ஏக்கர் விவசாய நிலம் கடும் தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கும்.

இதனால் விவசாயம் அழிந்து போகும். மேலும், நாங்கள் பராமரித்து வரும் கால்நடைகளும் உயிரிழக்க நேரிடும். எங்கள் கிராமங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும். எனவே பொதுமக்களின் நலன் கருதி நிர்வாகம் சுரங்கத்திலிருந்து தண்ணீரை வெளியேற்ற முயற்சிக்கக் கூடாது. அந்த திட்டத்தினை கைவிட வேண்டும்" என்று தெரிவித்துவிட்டு, அவர்களது கோரிக்கை மனுவினை மேக்னசைட் நிறுவனத்தின் பொது மேலாளரிடம் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் பொது மேலாளர், "பொதுமக்களின் கோரிக்கையைத் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரிடம் தெரிவிக்க உள்ளோம். அவர்களது முடிவே இறுதியானது" எனத் தெரிவித்தார். இதற்கிடையே மேக்னசைட் சுரங்கத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றக் கூடாது என்று கோரிக்கை விடுத்து 50க்கும் மேற்பட்ட மக்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: சொட்டு சொட்டாய் ஊறும் கிணற்றுத் தண்ணீர்.. குடங்களோடு காத்திருக்கும் கிராம மக்கள்! - Effects Of Summer Heat

ABOUT THE AUTHOR

...view details