தமிழ்நாடு

tamil nadu

கனிமொழி பெயரில் 30-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு.. விறுவிறுப்படையும் திமுக தேர்தல் பணிகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 5:07 PM IST

DMK election forms for MP election: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, திமுக சார்பில் விருப்பமனு விநியோகம் தொடங்கியுள்ள நிலையில், 400க்கும் மேற்பட்டோர் இதுவரை விருப்பமனு வாங்கியுள்ளதாக திமுக தலைமை அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

கனிமொழி பெயரில் 30-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு
கனிமொழி பெயரில் 30-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு

சென்னை: தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், அனைத்து கூட்டணி கட்சிகளுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளது திமுக. அதைத் தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதிகள் அமைக்க மக்களிடம் நேரடி அணுகுமுறையிலான யுக்தியை கையாண்டு, அதற்கென்று சிறப்புக் குழுக்கள் அமைக்கப் பெற்று, அதன் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முக்கிய கவனம் மேற்கொள்ளும் திமுக, அடுத்தபடியாக வேட்பாளர் தேர்வு விவகாரங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில், திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று திமுக சார்பில் முன்னதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி, கடந்த 19-ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது வரை 400-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக வேட்பாளர் விருப்ப மனு பெற்றோரின் விவரம்:

  • திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து, 30-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை வாங்கி உள்ளனர்.
  • இதேபோல் மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து, திமுக வர்த்தக அணி நிர்வாகிகள் மற்றும் சிலர், தயாநிதி மாறன் பெயரில் விருப்ப மனுக்களை வாங்கி உள்ளனர்.
  • திமுக சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்று பேசி வரும் சூர்யா வெற்றி கொண்டான், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுவை வாங்கி உள்ளார்.
  • திமுகவின் செய்தித் தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுவை பெற்றுள்ளார்.
  • திமுகவின் வர்த்தக அணிச் செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம், தென்சென்னை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுவை வாங்கி உள்ளார்.
  • திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மகன் அருண் நேரு பெயரிலும், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் வேலு பெயரிலும் சிலர் விருப்ப மனுக்களை வாங்கிச் சென்று உள்ளதாக அறிவாலய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விருப்ப மனுக்களை வாங்கிச் சென்றவர்கள், மார்ச் 1ஆம் தேதி முதல் 7-ஆம் தேதிக்குள் தலைமை அலுவலகத்தில் மனுக்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று திமுக தலைமை அறிவித்திருப்பதையொட்டி, அண்ணா அறிவாலயம் திமுக நிர்வாகிகளால் முழுநேரமும் சூழ்ந்தவாறு உள்ளது.

இதையும் படிங்க:"மெத்தனமாக இருந்து விடாதீர்கள்!"- ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை! கலக்கத்தில் நிர்வாகிகள்

ABOUT THE AUTHOR

...view details