தமிழ்நாடு

tamil nadu

“இலவச கல்வினு சொல்லிட்டு வசூல் வேட்டை நடத்துவதா?” - தனியார் பள்ளி மீது பெற்றோர் புகார்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 3:07 PM IST

Coimbatore Private School issue: இலவசக் கல்வி என்று குழந்தைகளை சேர்த்துவிட்டு, இப்போது 50,000 ரூபாய் வரை கல்விக் கட்டணம் கேட்பதாகவும், கட்டணத்தைச் செலுத்தாவிட்டால் பள்ளியில் இருந்து டிசியைப் பெற்றுக் கொள்ளுமாறும் கூறும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர், குழந்தைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் மனு
தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் மனு

தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் மனு

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் செட்டிபாளையம் பெரியார் நகர் பகுதியில், கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு, அறக்கட்டளை ஒன்று நிதி உதவியை அளித்து வருகிறது. ஆரம்பத்தில் இந்தப் பள்ளியில் இலவசக் கல்வி என்று கூறி தங்கள் குழந்தைகளை சேர்க்கச் செய்து, தற்பொழுது ஆயிரக்கணக்கில் வசூல் வேட்டை நடத்துவதாகவும், இதனைக் கேட்கப் போனால் டிசி (TC) வாங்கிக் கொண்டு, குழந்தையை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் கூறுவதாகவும், அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பள்ளிக் குழந்தைகளுடன் பெற்றோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இது குறித்து பெற்றோர் அளித்துள்ள மனுவில், ஆரம்பத்தில் இலவசக் கல்வி தருவதாகக் கூறி உறுதியளித்ததன் அடிப்படையில், நாங்கள் குழந்தைகளை அப்பள்ளிகளில் சேர்த்ததாகவும், அப்போது 100 ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெறப்பட்ட நிலையில், பின்பு 300, 600, 900 என ஆயிரத்து 800 ரூபாய் வரை கட்டணம் வசூலித்ததாகவும், 2023-2024ஆம் கல்வி ஆண்டில் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குறிப்பிட்டு உள்ளனர்.

மேலும் 2024-2025ஆம் கல்வி ஆண்டில் வெளிநாட்டில் இருந்து நிதி வரவில்லை எனக் கூறி, குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாயிலிருந்து, அதிகபட்சம் 50 ஆயிரம் ரூபாய் வரை கல்விக் கட்டணம் கேட்பதாகவும், கட்டணத்தைச் செலுத்த இயலாவிட்டால் பள்ளியில் இருந்து டிசியை (TC) பெற்றுக் கொண்டு செல்லுமாறு கூறுவதாக தெரிவித்து உள்ளனர்.

மேலும், இந்தப் பள்ளி வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA - Foreign Contribution (Regulation) Act) பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ள பெற்றோர், இந்தப் பள்ளியின் கட்டண ரசீதில் பள்ளிக் கட்டணம் 100 ரூபாய் என்று இருக்கும் நிலையில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகப்படியான கட்டணம் வசூல் செய்கிறது.

எனவே மாவட்ட ஆட்சியர் பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் இந்தப் பள்ளியின் டிரஸ்ட் உரிமத்தை அரசு தடை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கான தீர்வு எட்டப்படாத பட்சத்தில், நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பள்ளியின் முதல்வர் சொர்ணலதாவை மாற்றம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மனு அளிக்க வந்த பெற்றோர், குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு ஓரமாக சாலையில் அமர்ந்து கொண்டதால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:கல்குவாரி குறித்துப் பேச அனுமதி மறுப்பதா..! கரூர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details