தமிழ்நாடு

tamil nadu

உயர் நீதிமன்ற உத்தரவின்படி நடந்த ஆதி கருவண்ணராயர் கோயில் பொங்கல் திருவிழா.. ஈரோடு மக்கள் மகிழ்ச்சி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 12:01 PM IST

Adhi Karuvannarayar Temple: ஆதி கருவண்ணராயர் மாசி மக பொங்கல் விழாவானது உயர் நீதிமன்ற உத்தரவின் படி சிறப்பாக நடைபெற்றதாக இந்து சமய அறநிலையத்துறை ஈரோடு இணை ஆணையர் பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை  இணை ஆணையர்
பரஞ்சோதி

ஆதி கருவண்ணராயர் கோயில்

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தெங்குமரஹாடா வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதி கருவண்ணராயர் பொம்மாதேவியார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் மாசி மகம் திருவிழாவில், பொங்கல் வைத்து கிடா வெட்டி, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு மாசி மகம் திருவிழா பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கி இன்று (பிப்.25) ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 50 ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வர்.

இந்நிலையில், ஒரே நேரத்தில் அதிகளவிலான மக்கள் காட்டுக்குள் வந்து செல்வதால், வனத்தின் சூழல் மற்றும் வனவிலங்குகளின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில், கோயிலுக்கு வரும் வாகனங்களைக் கட்டுப்படுத்த, திருவிழா நடைபெறும் மூன்று நாட்களுக்கு நாளொன்றுக்கு நூறு வாகனங்கள் மட்டும் அனுமதி என்ற அடிப்படையில் 3 நாட்களுக்கு 300 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, முதல் இரண்டு நாட்கள் நடைபெற்ற திருவிழாவில், நாளொன்றுக்கு 100 வாகனங்கள் வீதம் 200 வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. மேலும், இந்து சமய அறநிலை துறை சார்பில், வன சோதனைச் சாவடி பகுதியில் இருந்து கோயிலுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. கோயிலில் பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து ஆதி கருவண்ணராயரை வழிபட்டனர்.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஈரோடு இணை ஆணையர் பரஞ்சோதி கூறியதாவது, “காராச்சிக்கொரை வன சோதனைச் சாவடியில் இருந்து நந்திபுரம் வரை, இந்து சமய அறநிலை துறையின் ஏற்பாட்டில் 7 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும், அரசு பேருந்துகளில் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்காமல் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதலின்படி விழா சிறப்பாக நடைபெற்றது” என்று தெரிவித்தார்.

மாசி மகத்திருவிழா குறித்து பக்தர்கள் கூறியதாவது, “நீதிமன்ற உத்தரவின் காரணமாக, ஒரு நாளைக்கு 100 வாகனங்கள் மட்டும் அனுமதி என்பதால், கூடுதலாக வாகனங்களில் வந்த பக்தர்கள் அரசு பேருந்துகள் மூலமாக நந்திபுரத்தில் இறங்கி, இரண்டு கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியில் நடந்து வந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும், நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட ஆடு, கோழிகள், சமையல் பொருட்கள், அடுப்பு உள்ளிட்ட பொருட்களை இரண்டு கிலோமீட்டர் தூரம் சுமந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், பெரும்பாலான மக்கள் திரும்பிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அடுத்த ஆண்டு நடைபெறும் திருவிழாவிற்கு வழக்கம் போல் வரும் அனைத்து வாகனங்களையும் அனுமதிக்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க:தென்காசி அருகே பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு: 2 ரயில்களை காப்பாற்றிய முதியவருக்கு குவியும் பாராட்டுகள்..

ABOUT THE AUTHOR

...view details