தமிழ்நாடு

tamil nadu

மகாமாரியம்மன் கோயில் பாடைக்காவடி திருவிழா..திருவாரூரில் வினோத திருவிழா - Maha Mariamman Temple Festival

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 24, 2024, 1:27 PM IST

Maha Mariamman Temple Festival: திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள மகாமாரியம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து வழிபட்டனர்.

maha mariamman temple padai kavadi festival
maha mariamman temple padai kavadi festival

மகாமாரியம்மன் கோயில் பாடைக்காவடி திருவிழா

திருவாரூர்:திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரையில் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் சக்தி தலமாகவும், கிராம வழிபாட்டு தலமாகவும் போற்றப்படுகிறது. சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை 'பாடைக்காவடி திருவிழா' நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில், இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றதுடன் தொடங்கியது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான, பாடைகட்டி காவடி எடுக்கும் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் நோய் குணமடைய மகாமாரியம்மனை வேண்டி கொள்வது வழக்கம்.

அவ்வாறு வேண்டி குணமடைந்தவர்கள், இக்கோயிலுக்கு மீண்டும் வந்து நேர்த்திக் கடனாக பாடைக்காவடி எடுப்பர். அதாவது, நோயிலிருந்து குணமடைந்தவர்கள், பச்சை மூங்கில் மற்றும் தென்னங்கீற்றால் ஆன பாடையில் உயிரோடு இருப்பவரைப் படுக்க வைத்து, இறந்தவருக்கு செய்யும் அனைத்து இறுதி சடங்குகளும் அவர்களுக்கு செய்யப்படும்.

இதையடுத்து, அந்த பாடைக்காவடியை அருகில் உள்ள குடமுருட்டி ஆற்றுப்பகுதியிலிருந்து உறவினர்கள் 4 பேர் தூக்கிக்கொண்டு வந்து, நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மகாமாரியம்மன் கோயிலை மூன்று முறை சுற்றி வலம் வருவார்கள். அப்போது நோயுற்றவர்களுக்கு அம்மனிடம் மறு உயிர் வாங்கியதாக ஐதீகம். இதனையே இப்பகுதியில் உள்ள பக்தர்கள் பாடைக்காவடி எனக் கொண்டாடுகின்றனர்.

இன்று நடைபெறும் பாடைக்காவடி திருவிழாவையொட்டி பக்தர்கள், பாடைக்காவடிகள், பால்குடம், பால் காவடி, பறவைக்காவடி, செடில் காவடிகள் உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனால், மகாமாரியம்மன் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் ஏராளமான பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இவ்விழாவையொட்டி திருவாரூர் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில், 200-க்கும் மேற்பாட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தவிர்க்கும் வகையில், ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு; தேனி நாடாளுமன்றத் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டி - TTV Dhinakaran Contest In Theni

ABOUT THE AUTHOR

...view details