தமிழ்நாடு

tamil nadu

இயற்கை விளைபொருள்களுக்கு நியாயமான விலை; மதுரையில் அசத்தும் இயற்கை சந்தை! - Madurai Natural market is improved

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 12, 2024, 10:47 PM IST

Organic materials at natural market: நுகர்வோருக்கும், உழவருக்கும் இடையேயான வணிகத்தை மேம்படுத்தும் முயற்சியாக, மதுரையில் ஒவ்வொரு மாதமும் 2வது ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் இயற்கை சந்தை, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயற்கை சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் விற்பனையாளர்கள் புகைப்படம்
இயற்கை சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் விற்பனையாளர்கள் புகைப்படம் (Credits to ETV Bharat Tamil Nadu)

மதுரை இயற்கை சந்தை வீடியோ (Credits to ETV Bharat Tamil Nadu)

மதுரை:இயற்கையாக விளைவிக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைப் பொதுமக்கள் அனைவரும் வாங்கும் விலையில் விற்பனை செய்வதற்காக தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பால் ஒவ்வொரு மாதமும் 2வது ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் இயற்கை சந்தை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பொதுவாக வேதி உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் உற்பத்திப் பொருட்களே, சந்தையில் பெரும் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலையில், ஆங்காங்கே இயற்கை சார்ந்த வேளாண் விளைபொருட்களும் அவ்வப்போது தலைகாட்டத்தான் செய்கின்றன. ஆனால், அவை நடுத்தர, அடித்தட்டு மக்களால் வாங்கி நுகர முடியாத விலையில் இருப்பதால், பரவலாகப் பொதுமக்களின் ஈர்ப்பைப் பெற இயலவில்லை. இந்நிலையில், இச்சூழலை மாற்ற தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து அதன் நிர்வாகிகளுள் ஒருவரான பிரசாந்த் கூறுகையில், “மதுரை இயற்கை சந்தை ஒவ்வொரு மாதமும் 2வது ஞாயிற்றுக்கிழமை மதுரை ஆவின் சந்திப்பில் அமைந்துள்ள போத்தீஸ் குடோவுனில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 5 வது மாதமாக இந்த சந்தை நடைபெறுகிறது.இயற்கை விவசாயம்என்பது பொதுமக்களின் தொடர்பற்ற சூழலில் உள்ளது. அதனை நெருக்கமாக்குவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.

இயற்கையாக விளைவிக்கப்பட்ட பொருட்கள் மீண்டும் ரசாயன உர விளை பொருட்களோடு இணைத்து விற்கப்படும்போது, அதற்கான மதிப்பினை இழந்து விடுகிறது. அதனால் இந்த நிலையை மாற்றி சந்தையில் இயற்கை வேளாண் விளைபொருட்களும் நியாயமான விலையில் விற்கப்படுவதை உறுதி செய்வதே எங்களின் முதன்மை நோக்கம்.

இந்த சந்தைக்கு வரும் பொதுமக்களோடு உழவர்கள் நேரடியாகத் தொடர்பு கொண்டு, தங்களது விளைபொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்கின்றனர். மாதத்தில் ஒரு நாள் மட்டும் இந்த சந்தையை நடத்தினாலும், வருகின்ற மக்கள் உழவர்களோடு தொடர்ந்து உறவைப் பேணுகின்ற நிலை ஏற்படுகிறது.

பொதுமக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளதால், இனி வருங்காலத்தில் போத்தீஸ் நிறுவன உறுதுணையோடு, இதே இடத்தில் பெரும் விற்பனை மையத்தையும் விரைவில் துவங்க உள்ளோம். இதனால் வருடத்தின் அனைத்து நாட்களிலும் தங்களுக்குத் தேவையான இயற்கை வேளாண் உற்பத்திப் பொருட்களைப் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும்”, என்றார்.

அனைத்து வகையான அரிசி, காய்கறிகள், விதைகள், இயற்கை உரங்கள், துணி வகைகள், சிற்றுண்டிகள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் என அனைத்தும் இங்கே கிடைக்கின்றன. இது குறித்து விவசாயி அன்னவயல் காளிமுத்து கூறுகையில், “நுகர்வோருக்கும், உழவருக்கும் இடையிலான வணிகத்தை மேம்படுத்தும் முயற்சி இது.

இங்கு பொருட்கள் வாங்குவது, விற்பது என்பதைத் தாண்டி, குழந்தைகளின் பங்கேற்பையும் உறுதி செய்வதற்காகப் பாரம்பரிய விளையாட்டுகளை, அந்த விளையாட்டிற்கான பொருட்களை அவர்களே உருவாக்குவது குறித்த பயிற்சிகளும், விளையாட்டுகளும் இங்கே கற்றுத் தரப்படுகின்றன.

களிமண் பொம்மைகள், பனையோலைகளில் விதவிதமான விளையாட்டுப் பொருட்கள் என அனைத்தும் இங்கே கற்றுத்தரப்படுகிறது. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையை விளையாட்டின் வாயிலாகக் குழந்தைகளுக்கு வல்லுநர்கள் சொல்லித் தருகின்றனர்”, என்றார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த நெசவாளர் ஈஸ்வரி கூறுகையில், “இந்த இயற்கை சந்தையில் தொடர்ந்து எங்களது அரங்கத்தை அமைத்து, இயற்கையாக நூல்களால் உற்பத்தி செய்யப்பட்ட சேலைகள் மற்றும் பல்வேறு வகையான துணிகளை விற்பனை செய்கிறோம். பொதுமக்கள் நல்ல ஆதரவு தருகின்றனர். நேரடியாக நுகர்வோரைச் சந்திக்கின்ற காரணத்தால் கட்டுப்படியாகும் விலைக்கே எங்களால் தர முடிகிறது. எவ்வாறு வேண்டும் என்பதை கூறினால் அது போன்று துணிகளை நெய்தும் தர முடியும்”, என்றார்.

தொடர்ந்து பேசிய ஐயர்பங்களாவைச் சேர்ந்த தானியக்குடில் என்ற கடையின் நிறுவனர் சிந்துஜா கூறுகையில்,“சிறுதானியங்களில் அனைத்து வகையான சிற்றுண்டிகளையும் தயார் செய்து விற்பனை செய்கிறோம். இயற்கை சந்தையின் தொடக்கக் காலங்களில் வருகை தந்த பொதுமக்கள் கிராம் கணக்கில் இதனை வாங்கிப் பயன்படுத்தினார்கள். தற்போது கிலோ கணக்கில் வாங்கிச் செல்கிறார்கள். சிறுதானியங்கள் குறித்து பொதுமக்களின் மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது”, என்றார்.

இதையும் படிங்க: உதகையில் 19வது ரோஜா கண்காட்சி: சுற்றுலா பயணிகளை கவர்ந்தது எது? - 19th Ooty Rose Show

ABOUT THE AUTHOR

...view details