தமிழ்நாடு

tamil nadu

ஓபிஎஸ் தலைமையில் பாஜக உடன் கூட்டணி உருவாகும்.. புகழேந்தி பேச்சு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2024, 12:39 PM IST

Pugazhenthi: 2017ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுபடி தேர்தல் ஆணையம் செயல்பட்டால், இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் கிடைக்கும் என்றும், அதில் தொடர்ந்து பிரச்னை செய்து வந்தால் சின்னத்தை முடக்குவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சின்னை கிடைக்கவில்லை என்றால் முடக்க வேண்டியது தான்
சின்னை கிடைக்கவில்லை என்றால் முடக்க வேண்டியது தான்

ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி

திருநெல்வேலி: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில், ஓபிஎஸ் அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கலந்து கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய புகழேந்தி, "தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டது. வெயில் தாக்கத்தால் ஜெயக்குமார் வாய்க்கு வந்தபடி உளறி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போட்ட பிச்சைதான் என்று பொது வெளியில் கே.பி.முனுசாமி போன்றோர் அசிங்கமாக பேசி வருகின்றனர்.

அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் பதவி, தற்போது கே.பி.முனுசாமிக்கு கிடைத்துள்ளது. இது அவருக்கு ஓபிஎஸ் போட்ட பிச்சை என்பதை மறந்து விடக்கூடாது. எடப்பாடி பழனிசாமி, அதிமுக தனது கையில் இருப்பதாக மாயையை உருவாக்கி வருகிறார். இதுவரை நீதிமன்றங்கள் போட்ட உத்தரவுகள் செல்லாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவில் வழக்கு எங்கு நிலுவையில் உள்ளதோ, அங்கு சென்று மூன்று வாரத்திற்குள் மனு செய்து, அந்த வழக்கை பார்த்துக் கொள்ளுங்கள் என நீதிமன்றம் சொல்லி உள்ளது. எங்களுக்கு நீதிமன்றம் பல வழிகாட்டுதல்களையும் வழங்கி உள்ளது. ஆனால், ஓபிஎஸ் தரப்பு போட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டனர்.

கொங்கு பகுதியில் உள்ள அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 15 பேரை, அண்ணாமலை தற்போது பார்சல் செய்து கொண்டு சென்று விட்டார். நிரந்தரமாக இருப்பவர்களைப் பற்றி மட்டுமே தற்போது பேச வேண்டும். 'ஜா ஜே' காலத்தில் வாக்காளர்கள் ஜெயலலிதாவை மதித்ததால், ஜானகி அம்மையார் ஜெயலலிதாவிடம் கட்சியை கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

தற்போது மனசாட்சிபடி நடந்து கொள்ளுங்கள் என அனைத்து பொதுமக்களும் சொல்லி வருவதை எடப்பாடி பழனிசாமி நினைவில் கொள்ள வேண்டும். இரட்டை இலை விவகாரத்தில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் முழு அதிகாரம், தேர்தல் ஆணையமிடமே உள்ளது. 2017ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுபடி தேர்தல் ஆணையம் செயல்பட்டால், எங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.

அவர்கள் தரப்பில் தொடர்ந்து பிரச்னை செய்து வந்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அவ்வாறு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால், நாங்கள் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டது போல் தனிச் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

எடப்பாடிக்கு சிறுபான்மையினர் தரப்பில் இருந்து ஒரு ஓட்டு கூட வராது. என்னைப் பொறுத்தவரை, ஓபிஎஸ் தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, பாரிவேந்தர், ஜான் பாண்டியன், ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் இணைந்து கூட்டணி உருவாகும். மறுபக்கம், திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமி தனித்து விடப்படுவார்.

ஒரு வார காலமாக கடை விரித்தும் இதுவரை எந்த கட்சியும் அவரிடம் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை. பாமக மற்றும் தேமுதிகவை அசிங்கப்படுத்திவிட்டு, அவர்களை மீண்டும் கூட்டணிக்கு அழைத்தால் எப்படி வருவார்கள்? ஒரு கட்சி சிதறிப் போனால், சிறிய கட்சிகள் கூட கூட்டணிக்கு வர மாட்டார்கள் என்பதை அவர்கள் உணர்ந்து இருக்க வேண்டும்.

மத்தியில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அமைந்தால், தமிழகத்தில் ஓபிஎஸ் தலைமையிலான கூட்டணி அமைய வேண்டும் என்பதே மூத்த தலைவர்களின் கருத்தாக உள்ளது. சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோர் ஒன்றிணைய அதிக வாய்ப்புள்ளது. விரைவில் நல்ல செய்தி வரும்" என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணிக்கு மறுத்த எடப்பாடி பழனிசாமிக்கு கெட்ட நேரம் துவங்கிவிட்டது - தென்காசியில் ஓபிஎஸ் பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details