தமிழ்நாடு

tamil nadu

நெல்லையில் பாஜக தேர்தல் அலுவலகம்.. நாடளுமன்ற தேர்தலில் நயினார் நாகேந்திரன் போட்டியா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 7:44 PM IST

திருநெல்வேலியில் பாஜக தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனை பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் திறந்து வைத்தனர்.

நயினார் நாகேந்திரன்
nainar nagendran

நெல்லையில் பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு

திருநெல்வேலி:2024 நாடளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களுடைய பணிகளை தொடங்கிவிட்டன. குறிப்பாக தேர்தல் அறிக்கை தயாரிப்பது , கூட்டணி பேச்சுவார்த்தை, பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில் திருநெல்வேலியில் பாஜக தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனை பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் அலுவலகத்தை திறந்து வைத்தனர். முன்னதாக கட்சி அலுவலகத்தில் கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதனையடுத்து நயினார் நாகேந்திரன் பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி இந்தியாவில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக தேசிய அளவில் 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெரும்.

தமிழகத்தில் கூட்டணி வைத்தோ அல்லது தனியாகவோ, கட்சி தலைமை முடிவின்படி போட்டியிட்டு அதிக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றுவோம். தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சி மிகப்பெரிய சரிவை சந்தித்து கொண்டு வருகிறது. வரும் நாடளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தாமரைக்கு வாக்களிக்க தயாராகி வருகிறார்கள்.

மோடியின் ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என்றார். இதனை தொடர்ந்து திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், யார் வேட்பாளர் என்பதை கட்சி தலைமை அறிவிக்கும் என்றார். தமிழகத்தில் ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இப்போது நெல்லையில் திறக்கப்பட்டுள்ளது.

கட்சி அலுவலகம் திறக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ள நிலையில் நெல்லை மற்றும் நீலகிரி உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது கட்சி மேலிடம் வேட்பாளரை அறிவிக்கும் முன்னரே திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதிக்கு நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அப்போது நல்ல நாள் என்பதால் தலைமையின் அனுமதியைப் பெற்று அவர் அவ்வாறு செய்ததாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கூட்டணி பேச்சு வார்த்தை தேர்தல் தேதி எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், தைப்பூச தினமான இன்று திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் அவரது சொந்த இடத்தில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வரவிருக்கும் நாடளுமன்ற தேர்தலில் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் போட்டியிட வாய்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க:அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் காலமானார்!

ABOUT THE AUTHOR

...view details