தமிழ்நாடு

tamil nadu

"கரூர் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் நானே போட்டி" - எம்.பி.,ஜோதிமணி திட்டவட்டம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 12:39 PM IST

Karur MP Jothimani: கரூரில் நான் சிட்டிங் எம்.பி எனவே நிச்சயமாக கரூர் நாடாளுமன்ற தொகுதியில் நான் தான் போட்டியிடுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர்
ஜோதிமணி

ஜோதிமணி

திண்டுக்கல்:வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில், நிறைவு செய்யப்பட்ட ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா நேற்று(பிப்.29) நடைபெற்றது.

அந்த வகையில், வேடசந்தூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் கட்டடத்தை, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி திறந்து வைத்து அங்கு பயின்ற மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாடாளுமன்ற தேர்தல் வருவதால் தமிழகத்துக்கு அடிக்கடி பிரதமர் வருகை தருகிறார். தமிழகத்தில் எத்தனை நதி, எத்தனை கடலுக்கு சென்று குளித்தாலும், எத்தனை கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தாலும் தமிழகத்தில் பாஜக போட்டி போடுவது நோட்டாவுடன் தான்.

என் மண் என் மக்கள் யாத்திரை மூலமாக தமிழகத்தில் பெரிய அரசியல் மாற்றங்கள் இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். நிச்சயமாக பெரிய மாற்றங்கள் இருக்கும். பாஜக நோட்டாவுடன் போட்டியிட்டு அதைவிட குறைந்த வாக்குகள் பெறும் என்பது உறுதி. உலக வரலாற்றிலேயே வசூல் செய்வதற்காக நடந்த யாத்திரை என்றால் அது மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நடந்த யாத்திரை தான்.

எங்கு பார்த்தாலும் வசூல், தமிழகத்தில் மொத்த வசூல் ராஜாக்களாக பிரதமர் மோடியும், மாநில தலைவர் அண்ணாமலையில் இருக்கிறார்கள். நான் சிட்டிங் எம்.பி நிச்சயமாக கரூர் நாடாளுமன்ற தொகுதியில் நான் தான் போட்டியிடுவேன். மேலும், கடந்த தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேனோ அதே வாக்கு வித்தியாசத்தில் வரக்கூடிய தேர்தலிலும் நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன்" என்று கூறினார்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு ஆகியவற்றில் தொடர் இழுபறி நீடித்து வரும் நிலையில் கரூர் எம்பி ஜோதிமணியின் இந்த அறிவிப்பு என்பது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:7.72 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்; ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிடுங்கள்.. அமைச்சர் அன்பில் மகேஷ்!

ABOUT THE AUTHOR

...view details