தமிழ்நாடு

tamil nadu

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 1200 ஆண்டுகள் பழமையான சிலைகள் கண்டெடுப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 1:07 PM IST

Ancient Sculptures: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே களத்தூரில், ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையான முற்காலப் பாண்டியர் கலைப்பாணியில் உள்ள திருமால், வைஷ்ணவி உள்ளிட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

more than thousand years old ancient statues found at virudhunagar
விருதுநகரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலைகள் கண்டெடுப்பு

விருதுநகர்:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அம்மாபட்டி ஊராட்சி களத்தூரில், ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையான முற்காலப் பாண்டியர் கலைப்பாணியில் உள்ள திருமால், லிங்கம், வைஷ்ணவி, நந்தி, காளி சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

பழமையான திருமால் சிலை, களத்தூர் அர்ச்சுனா ஆற்றின் கரையில் இருப்பதாக அம்மாபட்டி வீரையா என்பவர் கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் அங்கு ஆய்வினை மேற்கொண்டனர்.

அந்த ஆய்வினைத் தொடர்ந்து, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கூறுகையில், "மாயோன் என திருமால் தொல்காப்பியத்திலும், நெடுமால், நெடியோன், நெடுமுடி என பிற இலக்கியங்களிலும் குறிப்பிடப்படுகிறார்.

இதில், பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் இருக்கும் திருமால், நான்கு கைகளுடன் உள்ளார். கர்த்தரி முக முத்திரையில், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஆகியவற்றை ஏந்தியும், முன்னிரு கைகளை தொடையில் வைத்தும், காதுகளில் மகர குண்டலங்கள் மற்றும் கிரீட மகுடத்துடன் காட்சியளிக்கும் திருமால் சிலையில், முகம் தேய்ந்துள்ளது. மேலும், பிரயோகச் சக்கரமாக பக்கவாட்டில் சக்கரம் திரும்பி உள்ளது.

வலது காலைத் தொங்கவிட்ட நிலையில், இடது காலை மடக்கி சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். கிரீடமகுடத்தின் பின்பக்கம் சிரச்சக்கரமும், வலது மார்பில் ஸ்ரீவத்ஸமும் உள்ளன. நான்கு கைகளின் மேற்பகுதியின் நடுவில் தோள்வளை அணிந்துள்ளார். இந்த சிலை 109 செ.மீ உயரத்தில் உள்ளது.

இதன் அருகே உள்ள பலகைக் கல்லில், 82 செ.மீ உயரமும், 46 செ.மீ அகலமும் கொண்ட திருமாலின் பெண் சக்தியான வைஷ்ணவியின் புடைப்புச் சிற்பம் உள்ளது. சப்தகன்னியரில் ஒருவரான இவர், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்னிரு கைகளை தொடையில் வைத்துள்ளார். இந்த சிற்பமும் சேதமடைந்து உள்ளது.

இதன் வடக்கே நந்தியும், ஆவுடை அல்லாத லிங்கமும் உள்ளன. இங்கிருந்து 300மீ தூரத்தில் 2½ அடி உயரமுள்ள எட்டுக்கை காளி சிலை உள்ளது. திருமால் கையிலுள்ள பிரயோகச் சக்கர அமைப்பு மூலம், இச்சிற்பங்கள் கி.பி 9ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். அக்காலகட்டத்தில் இவ்வூரில் அருகருகே சிவன், திருமால், காளி கோயில்கள் இருந்துள்ளன. வைணவக் கோயில்களில் சப்தமாதர்கள் வழிபாடு, கி.பி 9ம் நூற்றாண்டு வரை இருந்துள்ளது.

மேலும், இதன் அருகிலுள்ள மேட்டில் இருக்கும் பெரிய கருங்கற்கள், இரும்புக்காலத்தைச் சேர்ந்த கல்வட்டம் மற்றும் கல்திட்டையின் கற்களாக இருக்கலாம். இதில் இருந்த கற்களை எடுத்து லிங்கத்தைச் சுற்றி வைத்துள்ளனர். மேலும் நுண்கற்காலக் கருவி, செங்கற்கள், சிவப்பு பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், இரும்புக் கசடுகள், சுடுமண் ஓடுகள் போன்றவையும் அங்கு சிதறிக் கிடக்கின்றன. ஒரு செங்கலின் அகலம் 16.5 செ.மீ, நீளம் 33 செ.மீ மற்றும் உயரம் 7 செ.மீ ஆகும்.

இதன்மூலம் இவ்வூரில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இரும்புக் காலத்தில் இரும்பு உருக்கு உலையும், மக்கள் குடியிருப்பும் இருந்துள்ளதை அறிய முடிகிறது. இவ்வூருக்கு அருகிலுள்ள நத்தம்பட்டி மற்றும் மங்கலத்துக்கும் வைணவம், சைவம் சார்ந்த தொடர்புகள் உள்ளன. நத்தம்பட்டியில் 8ம் நூற்றாண்டு திருமால் சிலை ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

இரும்புக் காலத்திலும், வரலாற்றின் இடைக்காலத்திலும் அருகருகே உள்ள இம்மூன்று ஊர்களிலும் மக்கள் வாழ்ந்துள்ளனர். இவ்வூர்கள் சேரநாட்டில் இருந்து மதுரை செல்லும் வணிகப் பெருவழியில் உள்ளன. எனவே வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பகுதியை, பாதுகாக்கப்பட்ட தொல்லியல் இடங்களாக அறிவித்து, தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க:கணவருக்காக தொடங்கிய ஆட்டோ பயணம்.. மகளிர் தினத்தில் மிளிரும் தென்காசி மர்ஜான்!

ABOUT THE AUTHOR

...view details