தமிழ்நாடு

tamil nadu

“அவசரகால பதற்றமே மோடியின் முகத்தில் பயமாக உள்ளது”.. ஸ்டாலின் கடும் விமர்சனம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 10, 2024, 3:29 PM IST

MK Stalin: பா.ஜ.க.வை வீழ்த்தியாக வேண்டும் என்ற அரசியல் நோக்கம் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளால் மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK Stalin
MK Stalin

சென்னை:5-வது முறையாக திமுகவின் வெற்றிக் கூட்டணி தொடர்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," புதிய அரசை ஆட்சியில் அமர்த்துவதற்காக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவை ஆண்ட பாஜக அரசானது, நாட்டையே பல்லாண்டு காலம் பின்னோக்கிக் கொண்டு போய்விட்டது. இதனை இப்போது தடுக்காவிட்டால், இனி எப்போதும் தடுக்க முடியாது என்ற எண்ணத்தில்தான் இந்தியா முழுமைக்குமான ஜனநாயக சக்திகளின் அணிச் சேர்க்கை நடைபெற்றது.

பா.ஜ.க.வை வீழ்த்துவது என்பது மட்டுமல்ல, அதன் பிறகு அமையப் போகும் அரசானது மக்களாட்சி சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், மாநில உரிமைகள், விளிம்புநிலை மக்களின் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டாட்சி அரசாக அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் 'இந்தியா' கூட்டணி அமைக்கப்பட்டது.

தங்களை எதிர்ப்பதற்கு யாரும் இல்லை என்ற மமதையுடன் இருந்த பாஜக தலைமையானது, அதன் பிறகுதான் களத்தின் உண்மை நிலவரத்தை உணர்ந்தது. 'இந்தியா' என்ற சொல்லையே சொல்லாமல் தவிர்த்தது. பத்தாண்டு காலத்துக்கு முன்னால் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், ஆட்சி முடியப் போகும் நிலையில் மாநிலம் மாநிலமாகச் சென்று திட்டங்களைத் தொடங்கி வைத்துக் கொண்டு இருக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி.

அவரது அவசரகாலப் பதற்றமானது அவர் முகத்தில் இருக்கும் பயத்தைக் காட்டுகிறது. 'மீண்டும் மோடி' என்று அவரது ஆதரவாளர்கள் எவ்வளவு கூச்சல் எழுப்பினாலும், 'வேண்டாம் மோடி' என்ற முழக்கமே இந்தியா முழுமைக்கும் இன்று எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.

பாஜகவை வீழ்த்தியாக வேண்டும் என்ற அரசியல் நோக்கம், 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளால் மக்கள் மனதில் விதைக்கப்பட்டுவிட்டது. பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்ற நோக்கத்துடன், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பல்வேறு மாநிலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தையையும் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, திமுக தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நேற்றைய தினத்துடன் மிகச் சிறப்பாக முடிவுற்றது. அகில இந்திய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் திமுகவில் இணைந்துள்ளது. 2025 மாநிலங்களவையில் அவரது கட்சியின் குரல் ஒலிக்க இருக்கிறது. நாங்கள் கொடுத்தோம், அவர்கள் பெற்றார்கள் என்பதாக இல்லாமல், 'அனைவரும் ஒத்த சிந்தனையுடன் அமர்ந்து பேசி, தொகுதிகளைப் பகிர்ந்து கொண்டோம்' என்பதுதான் உண்மையாகும்.

அனைத்து தலைவர்களும், ஊடகங்களில் அளித்த பேட்டிகளில் இதனை வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார்கள். எண்ணிக்கை அல்ல, எண்ணம்தான் முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள் நம் கூட்டணி கட்சித் தலைவர்கள். பாசிச பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே கொண்ட தலைவர்கள் இவர்கள். இந்த ஒற்றுமை உணர்வுதான் 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் அனைத்து வெற்றிகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்கள், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள், ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் ஆகிய அனைத்தையும் இக்கூட்டணி மூலமாகத்தான் வென்று காட்டினோம். தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறும் என்பதை மாற்றி, இலக்கு ஒன்றாக இருந்தால் கூட்டணியும் மாறாது என்பதையும் நாம் நிரூபித்து வருகிறோம். மாநிலங்களை மதிக்கும் மத்திய அரசை அமைக்க வேண்டுமானால், நாம் இங்கு நாற்பதுக்கு நாற்பது வென்றாக வேண்டும். பத்தாண்டு கால பாஜக ஆட்சி, இந்தியாவை பாழ்படுத்தியதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:விருப்பமனு தாக்கல் செய்த 2,984 பேர்! திமுக சார்பில் போட்டியிட 21 பேரை நேர்காணலில் தேர்வு செய்யும் மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details