தமிழ்நாடு

tamil nadu

"பாஜகவையும் மோடியையும் பற்றியும் பேச எஜமான விஸ்வாசம் தடுக்கிறதா?" - எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி! - MK Stalin in Salem

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 30, 2024, 10:50 PM IST

CM MK Stalin: இன்று சேலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜகவைப் பற்றியும், மோடியைப் பற்றியும் பேச எஜமான விஸ்வாசம் தடுக்கிறதா பழனிசாமி என கேள்வி எழுப்பி உள்ளார்.

Salem
சேலம்

சேலம்: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம் வேட்பாளர் செல்வகணபதியையும், கள்ளக்குறிச்சி வேட்பாளர் மலையரசனையும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டு எழுச்சியுரையாற்றினார்.

இந்த நிலையில், பாஜகவைப் பற்றியும், மோடியைப் பற்றியும் பேச, எஜமான விஸ்வாசம் தடுக்கிறதா பழனிசாமி என கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, "திராவிட மாடலின் குரல், தெற்கில் மட்டும் ஒலிக்கவில்லை. வடக்கிலும் ஒலிக்கிறது. வடக்கிற்கும் சேர்த்தே ஒலிக்கிறது. ஒரு மாநில அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நாம்தான் சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு மத்திய அரசு எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு பா.ஜ.க அரசுதான் எடுத்துக்காட்டு.

சில நாட்களுக்கு முன்னால், இதே சேலத்திற்கு வந்த பிரதமர் மோடி, ‘தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் ஆதரவைப் பார்த்து தி.மு.க.வின் தூக்கம் தொலைந்துவிட்டது’ என்று பேசிவிட்டுச் சென்றார். உண்மையில் உங்களால் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் யார் தெரியுமா? பத்தாண்டு கால பா.ஜ.க ஆட்சியில் பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்தினீர்களே, அந்த சாமானிய மக்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டார்கள். சிலிண்டர் விலையை உயர்த்தினீர்களே, தாய்மார்கள், ஏழைகள் தூக்கத்தை தொலைத்துவிட்டார்கள்.

வேலையில்லாத் திண்டாட்டத்தால் இளைஞர்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டார்கள். ஜி.எஸ்.டியால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை நடத்துகின்றவர்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டார்கள். பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான காங்கிரஸ் கொண்டு வந்த நிர்பயா நிதியை முறையாக ஒதுக்காமல் விட்டது பா.ஜ.க ஆட்சிதான். பா.ஜ.க எம்.பி.யால் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது, அவர்கள் போராடியது எல்லாமே பா.ஜ.க ஆட்சியில்தான்.

குஜராத்தில் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது, மோடி ஆட்சியில்தான். மணிப்பூரில் பெண்கள் என்ன என்ன கொடுமைகளுக்கு ஆளாகினார்கள் என்று நம்முடைய எம்.பிக்கள் குழு சென்று பார்த்து வந்து கதறினார்களே, அந்த கொடுமைகளை எல்லாம் இரக்கமில்லாமல் வேடிக்கை பார்த்தது மோடி ஆட்சிதான். ஜம்மு காஷ்மீரில், 8 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிக்கு ஆதரவாக இரண்டு பா.ஜ.க அமைச்சர்கள் ஊர்வலம் சென்றார்களே?

உத்தரப் பிரதேசத்தில் வேலை கேட்டுச் சென்ற இளம்பெண்ணை, பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங்கும், அவரின் சகோதரரும், நண்பர்களும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்தார்களே, அதுமட்டுமா, அந்தப் பெண்ணின் தந்தையை அநியாயமாகச் சிறையிலேயே வைத்து கொன்றார்களே, பாலியல் வல்லுறவுக்கு உள்ளான ஒரு பெண்ணை நீதிமன்றத்திற்குச் செல்லும் வழியிலேயே உயிருடன் கொளுத்தினார்களே, அதுவும் பா.ஜ.க. ஆட்சியில்தான்.

இந்த இலட்சணத்தில் பெண் சக்தி என்று பேசுவதற்கு உங்களுக்கும், பா.ஜ.க. ஆட்சிக்கும் என்ன தகுதி இருக்கிறது? என்ன அருகதை இருக்கிறது? அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டைப் புண்ணிய பூமியாக மாற்றுவோம் என்று பேசியிருக்கிறார்.

தமிழ்நாடு ஏற்கனவே புண்ணிய பூமியாகத்தான் இருக்கிறது. இங்கு எல்லோரும் சமத்துவமாக, சகோதரர்களாக, ஒற்றுமையாக இருக்கிறோம். அமைதியாக வாழும் தமிழ்நாட்டு மக்களை, மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் பிரித்து, குளிர்காயலாம் என்று நினைக்கும் ஒரே கட்சி பா.ஜ.கதான்.

இப்படிப்பட்ட மோடியின் கூட்டணியில் இருந்துகொண்டு, இப்போது அவரின் டைரக்‌ஷனில் கள்ளக்கூட்டணி நாடகம் போடும் பழனிசாமி என்ன செய்கிறார்? காலையில் ஒரு நாளேட்டுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் ஏன் பா.ஜ.க.வை எதிர்ப்பதில்லை என்று அவர்கள் கேட்டால், தி.மு.க, தி.மு.க. என்று தேய்ந்துபோன பழைய ரெக்கார்டு மாதிரியே பேசிக் கொண்டு இருக்கிறார். பா.ஜ.கவைப் பற்றியும், மோடியைப் பற்றியும் பேச எஜமான விஸ்வாசம் தடுக்கிறதா பழனிசாமி?

உங்கள் தலைமையிலான அ.தி.மு.க ஆட்சிதான் தமிழ்நாட்டின் இருண்ட காலம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, கொடநாடு கொலை, கொள்ளை, தற்கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, தலைமைச் செயலகத்தில் ரெய்டு, அமைச்சர் மற்றும் டி.ஜி.பி மீது குட்கா வழக்கு, பெண் எஸ்.பிக்கு பாலியல் வன்முறை, சட்டம் – ஒழுங்கு என்பதே இல்லாமல், ஒட்டுமொத்த நிர்வாக இயந்திரமும் முடங்கிய ஆட்சிதான் பழனிசாமியின் ஆட்சி.

தான் பதவி சுகம் அனுபவிக்க தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்தவர்தான் பழனிசாமி. இப்படிப்பட்ட பழனிசாமிக்கு மக்களும் வாக்களிக்கத் தயாராக இல்லை. உண்மையான அ.தி.மு.க தொண்டர்களும் தயாராக இல்லை" எனப் பேசினார்.

இதையும் படிங்க:ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பலாப்பழம் சின்னத்தில் போட்டி - மற்ற 4 ஓபிஎஸ் பெற்ற சின்னங்கள் என்ன? - Ex CM OPS Allotted Jackfruit Symbol

ABOUT THE AUTHOR

...view details