தமிழ்நாடு

tamil nadu

அண்ணா அறிவாலய துணை மேலாளர் ஜெயக்குமார் மறைவு - முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 12:20 PM IST

MK Stalin Condolence: திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் துணை மேலாளர் ஜெயக்குமார் உடல் நலக்குறைவால் இன்று காலமானதை அடுத்து, அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

MK Stalin Condolence for DMK Anna arivalayam Deputy Manager Jeyakumar demise
திமுக அண்ணா அறிவாலய துணை மேலாளர் ஜெயக்குமார் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் துணை மேலாளர் ஜெயக்குமார், உடல் நலக்குறைவால் இன்று (பிப்.13) காலமானார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று, ஜெயக்குமார் அறிவாலய அலுவலகத்திலேயே வாந்தி மற்றும் மயக்கம் உள்ளிட்ட உடல் நல பாதிப்பால், ஆம்புலன்ஸ் மூலம் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (பிப்.13) காலை 6.45 மணி அளவில் காலமானார். இதைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தின் துணை மேலாளர் ஜெயக்குமார் மறைவிற்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த இரங்கல் செய்தியில், "திமுக தலைமையின் தூணாக விளங்கிய நம் அன்புக்குரிய ஜெயக்குமார் மறைந்த செய்தி வந்தடைந்து என்னை சோகத்தில் ஆழ்த்தியது. அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக அவரது உழைப்பையும், வளர்ச்சியையும் அருகிலிருந்து கவனித்து வந்தேன். அண்ணா அறிவாலய அறிவகத்தில் செயல்பட்டு வந்த காலத்திலேயே, திமுக தலைமைப் பணிகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயலாற்றத் தொடங்கினார்.

அறிவகத்தில் தொடங்கிய அவரின் பயணம், அரசினர் தோட்ட சட்டமன்ற அலுவலகம், அன்பகம் எனத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தின் துணை மேலாளர் என உச்சம் பெற்றது. தலைமை அலுவலகத்தை நாடி வந்த ஒவ்வொரு தொண்டரும், அவரோடு அன்போடும், உரிமையோடும் உறவாடி, அவருக்கு 'அறிவாலயம்' ஜெயக்குமார் எனப் பெயரிட்டனர். அண்ணா அறிவாலயத்தின் மேலாளரான பத்மநாபனும், ஜெயக்குமாரும் இரட்டைத் தூண்கள் என தலைமைப் பணிகளைத் தாங்கி வந்தனர்.

தலைமையால் எடுக்கப்படும் முடிவுகளை பிழைதிருத்தம் செய்து, அவற்றை வெளியிட்டதில் அவர்கள் இருவரது பங்கும் அளப்பரியது. அதில் ஒரு தூண் இன்று சரிந்துவிட்டது என்பது திமுகவிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. பாசத்துடன் பழகிய ஜெயக்குமாருக்கு திருமணம் நடத்தி வைத்தேன். அவரது குழந்தைகளுக்குப் பெயரிட்டேன், அவரது குடும்பத்தினரின் திருமணங்களை நடத்தி வைத்தேன், அவரது குடும்பத்தில் ஒருவனாய் இருந்தேன்.

தொண்டர் என்ற சொல்லுக்கு ஏற்ப, உடன்பிறப்பாய் துணை நின்ற அறிவாலயம் ஜெயக்குமாரை வழியனுப்பும் துயர நிலைக்கு இன்று ஆளாகிவிட்ட கொடுமையும் வந்து சேர்ந்துவிட்டது. கலங்கி நிற்கும் உங்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லித் தேற்ற வேண்டிய நிலையில் இருக்கிறேன். அறிவாலயம் ஜெயக்குமாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், தொண்டர்கள் என அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஹிமாச்சலில் சடலமாக மீட்கப்பட்ட வெற்றி துரைசாமி..! இன்று சென்னையில் உடல் தகனம்..முழு விபரம்..

ABOUT THE AUTHOR

...view details