தமிழ்நாடு

tamil nadu

மதுரை எய்ம்ஸ் குறித்து மோடியிடம் கேட்டால் ஈபிஎஸ்-க்கு கோபம் வருவது ஏன்? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி - Minister Udhayanidhi Stalin

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 30, 2024, 8:42 AM IST

Minister Udhayanidhi Stalin: தமிழகத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு, பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு விட்டதாகவும், இதுகுறித்து மோடியை பார்த்து கேட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Minister Udhayanidhi Stalin
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து தாம்பரம், பல்லாவரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று (வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை, ஏழு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தால், மாதம் இரண்டு முறை பல்லாவரம் தொகுதிக்கு வந்து உங்களை சந்திப்பேன். கரோனா காலத்தில் மோடி ஒளிந்து கொண்டார், கடைகளைப் பூட்ட சொன்னார். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக் கொண்டு, பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு சென்றார்.

தமிழகம் முழுவதும், ஒவ்வொரு நாளும் 18 லட்சம் குழந்தைகளுக்கு 'காலை உணவுத் திட்டம்' வழங்கப்பட்டு வருகிறது. இதனால், திராவிட மாடல் அரசு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில், பெற்றோர்கள் தைரியமாக பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக இருப்பதுதான், திராவிட அரசு.

பக்கத்து மாநிலங்களும் இதை ஏற்றுகொண்டு, அவர்கள் மாநிலத்தில் அமல்படுத்துகின்றனர். தமிழகத்தில் உள்ள 1 கோடியே 17 லட்சம் பெண்களுக்கு, மகளிர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதில் சில குறைகள் உள்ளது தான்; ஏனெனில், இது எளிதான திட்டம் கிடையாது. அதில் இருக்கும் குறைகள், பிரச்னைகள் என அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் வழங்கப்படும்.

மதுரையில் அடிக்கல் நாட்டி விட்டுச் சென்ற எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை நான் எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன். அங்கு எய்ம்ஸ் மருத்துவமனையைக் காணவில்லை எனத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு, பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் கட்டப்படவில்லை.

இதுகுறித்து பிரதமர் மோடியைப் பார்த்து கேட்டால், எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது. இருவரும் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்கள். புதிதாக கொண்டுவரப்படும் புதிய கல்விக் கொள்கையில், 8ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு கொண்டுவர திட்டமிடப்பட்டு வருகிறது. இதைக்கொண்டு வருவதன் நோக்கம், நமது வீட்டு மாணவர்கள் படிக்கக்கூடாது என்பதுதான். அதுவே அவர்களின் குறிக்கோளாக உள்ளது.

நீட் தேர்வு (NEET Exam) காரணமாக உயிரிழந்த 22 மாணவர்களின் வீட்டிற்கும் நான் சென்று துக்கம் விசாரித்தேன். ஆனால், மோடி வரவில்லை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு விலக்கு அளிக்கப்படும். எரிவாயு சிலிண்டரில் விலையை 800 ரூபாயாக உயர்த்தி விட்டு, பின்னர் அதிலிருந்து 200 ரூபாயைக் குறைத்துள்ளார், பிரதமர் மோடி.

திமுக தேர்தல் அறிக்கையில், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், கண்டிப்பாக எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும், 75 ரூபாய்க்கு பெட்ரோலும், 65 ரூபாய்க்கு டீசலும் கொடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அனைத்தும் அகற்றப்படும். எனவே, ஒவ்வொரு திமுக தொண்டரும் பொறுப்பெடுத்து, அவரவர் பகுதியில் வாக்கு சேகரிக்க வேண்டும்" எனப் பேசினார்.

இதையும் படிங்க:பிரபல நடிகர் டேனியல் பாலாஜி காலமானார் - DANIEL BALAJI

ABOUT THE AUTHOR

...view details