தமிழ்நாடு

tamil nadu

"முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கைராசிக்காரர், அவர் தொட்டது துலங்கும்" - அமைச்சர் மா.சு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 10:30 PM IST

Organ Transplant Facilities: அரசு மருத்துவமனைகளில் புதிதாக கல்லீரல், தோல் மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மச்சை அறுவை சிகிச்சை உட்பட 8 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Organ Transplant Facilities
புதிதாக 8 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான வசதிகள் ஏற்பாடு

கோயம்புத்தூர்:கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் 3 அதிநவீன மருத்துவ உபகரணங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (பிப். 7) திறந்து வைத்தார். மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் நல்லா ஜி.பழனிசாமி வரவேற்றுப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கி பேசும் போது, "கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையை 1990ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் 200 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்டது. தற்போது 2000-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் இந்த மருத்துவமனை விரிவடைந்து உள்ளது.

இதன் மூலம் கலைஞர் கருணாநிதி கைராசிக்காரர் என்பதும், அவர் தொட்டது துலங்கும் என்பதும் நிரூபணமாகி உள்ளது" என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "இதய மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் செய்து வரும் நிலையில், தற்போது கல்லீரல் மற்றும் தோல் மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மச்சை அறுவை சிகிச்சை உட்பட 8 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளில் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 5 லட்சம் ரூபாய் அளவில் மருத்துவ வசதிகள் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை இரண்டு லட்சத்து 80 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

இதுமட்டும் இன்றி, 1500 மருத்துவமனைகளுக்குக் காப்பீட்டுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மட்டும் அல்லாது, தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பான மருத்துவ காப்பீட்டுச் சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது" என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில், கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர், மருத்துவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் திமுக கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இருபாலருக்கும் ஒரே கழிவறையா? தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்த மயிலாடுதுறை மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details