தமிழ்நாடு

tamil nadu

எதிர்க்கட்சிகளை அழிப்பதே மோடியின் குறிக்கோள்: அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 10:17 AM IST

Minister KN Nehru: எதிர்க்கட்சிகளை அழிப்பதையே பிரதமர் மோடி குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவதாகவும், அவர் மீண்டும் பிரதமரானால் வருங்காலத்தில் தேர்தல் என்பதே இருக்காது எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

minister kn nehru said that Modi aims to destroy the opposition parties
எதிர்க்கட்சிகளை அழிப்பதையே பிரதமர் மோடி குறிக்கோளாகக் கொண்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்

எதிர்க்கட்சிகளை அழிப்பதையே பிரதமர் மோடி குறிக்கோளாகக் கொண்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்

திருச்சி:முசிறியில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி சார்பில் 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்', பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற திமுக பொதுக்கூட்டம் நேற்று (பிப்.18) நடைபெற்றது. முசிறியில் இருந்து தா.பேட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ள திடலில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்தார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், மாணிக்கம், கதிரவன், ஸ்டாலின் குமார், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் வரவேற்றனர். விழாவில் திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, திமுக கழக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

அப்போது அமைச்சர் கே.என்.நேரு, "இந்தியா எத்தனையோ பிரதமர்களைக் கண்டுள்ளது. பிரதமர் நேரு‌, இந்திராகாந்தி ஆகிய எண்ணற்ற தலைவர்கள் இந்தியாவை கட்டமைத்துள்ளனர். ராஜீவ்காந்தி நாட்டிற்கு சிறப்பாக பணியாற்றியுள்ளார். அதேபோல பாரதிய ஜனதா கட்சியில் பிரதமராக இருந்த வாஜ்பாய் சாலை திட்டங்களை கொண்டு வந்தவர். ஆனால் தற்போது இருக்கும் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை அழிப்பதையே தனது குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.

அவர் மட்டும் மீண்டும் பிரதமராக இந்தியாவிற்கு வந்தால் வருங்காலத்தில் தேர்தல் என்பதே இருக்காது என்ற நிலையை உருவாக்கி விடுவார் என அனைவரும் பேசிக் கொண்டுள்ளனர். பாஜகவினர் வடநாட்டில் கடவுளின் பெயரால் ஆட்சிக்கு வர துடித்துக் கொண்டு இருக்கின்றனர். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அமைச்சர்களையும், முதல்வர்களையும் மிரட்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

அமலாக்கத்துறை என்ற துறையை கையில் வைத்துக் கொண்டு, தினந்தோறும் அவர்களை மிரட்டுவதை செயல்படுத்தி வருகின்றனர். மாநிலத்தில் உள்ள மக்கள் தங்கள் முதலமைச்சர்களிடம், எங்களுக்கு இந்த கோரிக்கையை செய்து தாருங்கள் என்று போராடுவது வழக்கம். ஆனால் மாநில முதலமைச்சர்களே ஒன்று சேர்ந்து மோடியை எதிர்த்து போராடும் நிலை இந்தியாவில் தற்போது இருந்து வருகிறது.

தற்போது டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். தங்கள் விலை பொருட்களுக்கு தகுந்த விலை கொடுக்க வேண்டும் எனப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக பல செயல்பாடுகளை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது.

இதனை எல்லாம் அகற்றி நல்லாட்சி தரும் நோக்கில் தமிழக முதலமைச்சர் ஆலோசனையின் பேரில், ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி என்ற கூட்டணியை உருவாக்கி, மத்தியில் நல்ல ஆட்சி கொண்டு வருவதற்கான முயற்சியை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார். 40 தொகுதிகளிலும் இதே போன்ற வெற்றிக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். வருகின்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை ஈட்டித் தருவோம்" எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, "மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திராவிட மாடல் என்று கூறினால் பிரிவினை வாதம் எனக் கூறுகிறார். அண்ணாவும், கலைஞரும் கூறிய திராவிட மாடல் என்பது அடித்தட்டில் இருக்கும் மக்களை தூக்கி விட வேண்டும். அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று உருவாக்கியது. மாநில உரிமைகளை கேட்பது பிரிவினைவாதமா? மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதுதான் திராவிட மாடல்.

நாங்கள் பிரிவினைவாதி கிடையாது. மாநிலங்களுக்கு உரிமை கேட்கிறோம். டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை மிரட்டிப் பார்க்கின்றனர். ஆனால் அவர் அதற்கெல்லாம் பயப்படாமல் தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபித்துக் காட்டியுள்ளார். மத்திய அரசு மாநிலங்களில் இருப்பவர்களை எப்படியாவது ஒடுக்கி அடக்கி, தமது நிறத்தை உருவாக்க வேண்டும் என நினைக்கிறது.

மாநில உரிமையை மீட்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருகிறார். திராவிட மாடல் என்பது அனைவரும் சமம், மத வேறுபாடு இருக்கக் கூடாது என்பதே. இந்துக்களாக இருந்தாலும், கிருஸ்தவராக இருந்தாலும், முஸ்லீமாக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும் அனைவரும் சமம் என்பது தான் திராவிட மாடல். அனைவரும் சமமாக வாழ வேண்டும். அனைவரும் உரிமையோடு வாழ வேண்டும்.

கோயில் கூடாது என்பதல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என கலைஞர் எழுதினாரே அதுதான் திராவிட மாடல். நமக்கு பிரிவினைவாதம் அல்ல. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது தான் நமது நோக்கம். மத்தியில் இருக்கும் பாஜக சொன்னது எதையும் செய்யவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா? அது சரியாக இருக்குமா?

ஒற்றை ஆட்சி கொண்டுவர வேண்டும், ஒரு தனி மனிதன் ஆட்சியை இந்தியாவின் கீழே கொண்டுவர வேண்டும் என்பதுதான் பாசிஸ்ட் கவர்ன்மெண்ட். அதுதான் பாசிச ஆட்சி. அதனால் தான் ஒரே தேர்தல் எனக் கொண்டு வர பாஜாக நினைக்கிறது. டெல்லியில் போராடும் விவசாயிகள் கேட்பது, தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு, தாங்களே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதைத் தான்.

தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை. வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதால், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி டெல்லிக்கு போராட சென்ற விவசாயிகள் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்து, அவர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுவதும், புகை குண்டுகளை வீசுவதும் எந்த விதத்தில் நியாயம்.

441 எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி, அங்கு இருக்கும் பிற மாநில ஆட்சிகளை கவிழ்கிறது. இந்தியா கூட்டணிக்கு அடித்தளம் இட்டவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான். ஆகையால், தமிழக முதலமைச்சர் பேசும்போது நாம் யார் வரவேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்பதை முழுமையாக கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"தடைகளைத் தாண்டி... வளர்ச்சியை நோக்கி" தயாரான தமிழக பட்ஜெட்.. லோகோவை வெளியிட்ட தமிழக அரசு..!

ABOUT THE AUTHOR

...view details