தமிழ்நாடு

tamil nadu

“கர்நாடகா எப்போ தரேன்னு சொல்லிருக்காங்க?” - அமைச்சர் துரைமுருகன் விளாசல்! - Duraimurugan about Karnataka

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 3:08 PM IST

Duraimurugan: காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “என்றாவது ஒரு நாளாவது தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடுவோம் என்று சொல்லியுள்ளதா? எப்போதும் அதே பாட்டு தான். ஆகையால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்” என்று கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் அமைந்துள்ள மே தின நினைவுச் சின்னத்திற்கு, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு, மே தின நினைவுச் சின்னத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்.பி, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, துணை பொதுச் செயலாளர் கனிமொழி, செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய அலுவலகச் செயலாளர்கள் பூச்சி முருகன், சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு, துணை மேயர் மகேஷ் குமார், தொமுச பொருளாளர் நடராசன், நிர்வாகிகள், தொண்டர்கள், தொமுசவினர் ஆகியோர் கலந்து கொண்டு மே தின நினைவுச் சின்னத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

மே தின நினைவுச் சின்னம்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “மனித வரலாற்றில் ஒரு உரிமையைப் பெற்ற நாள், ஒரு காலத்தில் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல், இரவு பகல் பாராமல் வேலை வாங்குவது என்ற கொடுமையான நிலைமை உலகம் முழுவதும் இருந்தது. அந்த நிலைமை மாற வேண்டும் என்பதற்காக, ஆங்காங்கே சில உரிமை பெற்ற தொழிற்சங்கங்கள் போராடினர்.

அந்தப் போராட்டத்தின் விளைவாகத்தான் மனித வர்க்கத்திற்கு ஒரு விடுதலை கிடைத்தது. மனித உரிமை கொண்டாடப்படும் நாட்களில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. திமுக ஆரம்பத்தில் இருந்து தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்ட இயக்கம். திமுகவைப் பொறுத்தவரை, எங்களுடைய தொழிற்சங்க பிரிவு தொழிலாளர் வர்க்கத்திற்காக நீண்ட நெடுங்காலம் போராடி, பல்வேறு தியாகங்களை செய்து பல வெற்றிகளை பெற்றிருக்கிறது.

நினைவுச் சின்னம் வைக்க சட்டமன்றத்தில் பலர் கேட்டபோது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, என்னிடம் துப்பாக்கியில் சின்னதாக ஒரு படம் போட்டு இதேபோல் ஒன்று செய்து காட்டு என்று கூறினார். மூன்று தினத்தில் இந்த அடையாளத்தை நாங்கள் உருவாக்கி காட்டினோம், அவரே வந்து பார்த்தார். தொழிலாளர்கள் வர்க்கத்தின் உரிமை வரலாற்று வடிவமாக இந்த சின்னம் அமைந்துள்ளது” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக பேசிய அவர், “என்றாவது ஒரு நாளாவது தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடுவோம் என்று சொல்லியுள்ளதா, இல்லை. அதிகமான தண்ணீர் இருக்கும் பொழுதும் அதே பாட்டு தான். குறைவான தண்ணீர் இருக்கும் பொழுதும் அதே பாட்டு தான்.

காவிரி வாட்டர் மேனேஜ்மென்ட் போர்ட் தமிழ்நாட்டிற்கு தண்ணீரைத் திறந்து விடு என்று சொல்லிய பொழுதும், திறக்க மாட்டோம் என்று சொல்கிறார்கள். ஆகையால், மத்திய அரசை மதிக்காமல் கர்நாடக அரசு உள்ளது. இதைக் கேள்வி கேட்க வேண்டியது உச்ச நீதிமன்றம். அதை நாங்கள் நாடுவோம்” என்றார்.

துரைமுருகனைத் தொடர்ந்து பேசிய தொமுச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், “இந்த மே தினத்தில் இந்தியாவில் உள்ள தொழிலாளர் விரோத மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதற்காக அரும்பாடுபட்டு பல்வேறு போராட்டங்கள் நடத்தி, தொமுச பேரவை இன்று தேர்தல் களத்தில் நின்று மோடிக்கு எதிராக குரல் கொடுத்து, அந்த வெற்றிக்கனியை ஈட்டுவதற்கு தயாராக இருக்கின்றார்கள். நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி வெற்றி பெறும்போது தொழிலாளர் விரோத நடவடிக்கைகள், மக்கள் விரோத நடவடிக்கைகள் நிச்சயம் தீர்த்து வைக்கப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆசிரியர் கவனத்திற்கு.. எமிஸ் பற்றி இனி கவலை வேண்டாம்.. டேராடூனில் அமைச்சர் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! - Minister Anbil Mahesh Poiyamozhi

ABOUT THE AUTHOR

...view details