தமிழ்நாடு

tamil nadu

பெட்ரோல் நிலையங்களை நேரில் ஆய்வு செய்வது அவசியம் - பெட்ரோலியம் பாதுகாப்பு அமைப்பிற்குச் சென்னை ஐகோர்ட் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 9:34 PM IST

Central Petroleum Safety Authority: மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விற்பனை நிலையங்களின் உரிமம் வழங்குவதற்கு முன், மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் பாதுகாப்பு அமைப்பு நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: வி.பி.ஆர் மேனன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “பெட்ரோல் விற்பனை நிலையங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அதற்கான இடங்களில் அமைக்கப்பட வேண்டும். எண்ணெய் கசிவுகளால் புற்றுநோய் மற்றும் மூளை தொடர்பான நோய்கள் வர வாய்ப்புள்ளது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. தமிழக அரசிடம் இருந்து பாதுகாப்பு தொடர்பான தடையில்லாத சான்றைப் பெற்ற பின்னர், மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பிடம் உரிமம் பெற வேண்டும்.

உரிமம் பெற மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்களிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் அமைக்க வேண்டும், தீயணைப்பு வாகனங்கள் செல்ல இட வசதி அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் பல பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து தடையில்லா சான்று வழங்கியதாகப் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பிடம் உரிமம் பெற்று இயங்கி வருகிறது.

அதனால், மத்திய அமைப்பு நேரடி ஆய்வு செய்த பின் உரிமம் வழங்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சஞ்சய் கங்கபூர்வாலா, பரத சக்ரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, விதிகளின் படி மாநில அரசு நேரடி ஆய்வு செய்ய வேண்டும் எனவும், மத்திய அரசு அமைப்பு ஆவணங்களை ஆய்வு செய்து உரிமம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளதாக என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உரிமம் வழங்குவதற்கு முன், மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் பாதுகாப்பு அமைப்பு ஆவணங்களுடன் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். எல்லா நிறுவனங்களையும் நேரில் ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் சந்தேகம் உள்ள விற்பனை நிலையங்களை மட்டும் ஆய்வு செய்யலாம்.

மாவட்ட நிர்வாகத்தால் தடையில்லாத சான்று பெற்ற நிறுவனங்களின் உண்மைத் தன்மையை மீண்டும் ஆய்வு செய்யலாம். மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் படி வருவாய் அதிகாரிகள் கட்டாயம் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details