தமிழ்நாடு

tamil nadu

அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, எம்.பி. ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக கோ-வாரண்டோ மனுக்கள் முடித்து வைப்பு..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 10:37 PM IST

Quo Warranto Case: அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, எம்.பி. ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக கோ-வாரண்டோ மனுக்களை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mhc-comments-ministers-not-to-humiliate-other-community-peoples
அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, எம்.பி. ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக கோ-வாரண்டோ மனுக்களை முடித்து வைப்பு

சென்னை:அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, எம்.பி. ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக கோ-வாரண்டோ மனுக்களை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி அனிதா சுமந்த் பிறப்பித்த தீர்ப்பில் கூறி இருப்பதாவது:

அமைச்சர்களுடைய கருத்துகள் பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய, பிழையான, அரசியல் சட்டத்திற்கு முரணான தவறான தகவல்களைக் கொண்டதாக இருக்கின்றன. ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் அனைத்துக் குடிமக்களுக்கும் சம சுதந்திரம் வழங்க வலியுறுத்தும் நிலையில், வெறுப்பு மற்றும் பிரிவினை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவது ஆபத்தானது.

உதயநிதி, ஆ.ராசா ஆகியோரின் கருத்துகள் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும், அரசியல் சாசனப் பதவி வகிப்பவர்கள் தங்கள் சொந்த மக்கள் பின்பற்றும் குறிப்பிட்ட நம்பிக்கையை ஒழிப்பதாகப் பேச முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துச் சுதந்திரம் இருப்பதாக அமைச்சர்கள் முன்வைத்த வாதத்தைக் குறிப்பிட்ட நீதிபதி, அந்த சுதந்திரமானது அரசியல் சட்டத்திற்கு விரோதமாகப் பேசவோ? குறிப்பிட்ட நம்பிக்கைக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசவோ?
அரசியல் சாசனப் பதவி வகிப்பவர்களுக்கு அளிக்கப்பட்ட ஒப்புதல் என கருத முடியாது என தெளிவுபடுத்தி உள்ளார்.

குறிப்பிட்ட நம்பிக்கையை ஒழித்துவிடுவதாக இவர்கள் பேசியது மதச்சார்பற்ற தன்மையின் மதிப்புகளின் கீழ் இவர்கள் எடுத்த உறுதிமொழியை மீறும் செயலாகும். சனாதன தர்மம் என்பது மக்களின் உயர்வுக்கான ஒரு வழிகாட்டு விதி என்றும், சனாதன நம்பிக்கை என்பது மக்களை ஒருங்கிணைப்பதற்காகவே தவிர, பிளவுபடுத்துவதற்கு அல்ல என்றும் குறிப்பிட்டுள்ள நீதிபதி, அந்த ஒருங்கிணைப்பு பணிகளைத் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தற்போதைய சமுதாயத்தில் நிலவும் சமத்துவமின்மை ஒழிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், அதற்காக ஒட்டுமொத்த வர்ணாசிரமத்தைக் குற்றம் சொல்ல முடியாது என குறிப்பிட்டுள்ளார். வர்ணாசிரமம் பிறப்பின் அடிப்படையில் பிரிவினையை உருவாக்கவில்லை எனவும், தொழிலின் அடிப்படையில் தான் சமூகத்தைப் பிரித்திருக்கிறது என தெரிவித்துள்ள நீதிபதி, இன்றைய சமுதாயத்தில் அது பொருந்துமா? பொருந்தாதா? என்பது விவாதத்திற்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சனாதன தர்மத்தைத் தவறாக வர்ணாசிரமத் தர்மத்துடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள நீதிபதி அனிதா சுமந்த், ரிக் வேதம் சொல்லக்கூடிய பழமையான வர்ணாசிரமத் தர்மத்தின் மீது பழிபோட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சாதிய நடைமுறை என்பது நூற்றாண்டைக் கூட தாண்டாத நிலையில் ஒட்டுமொத்த வர்ணாசிரமத்தைக் குறை கூற முடியாது எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத்தில் இருக்கும் சாதி ரீதியிலான பிரிவினையை ஒழிக்க அதிகாரத்தில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதை விட்டுவிட்டு அதற்கு ஆதரவாகப் பேசுவது போல் இவர்களின் பேச்சுக்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

விமர்சனங்கள் வளர்ச்சிக்கு அவசியமானது தான் என்றாலும், அவை ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும். கடந்த கால நியாயமற்ற அநீதிகளைச் சரி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்றும், இன்று நடைமுறையில் உள்ள சாதியச் சமத்துவமின்மை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சாதிய அடிப்படையில் மக்கள் கொடூர முகத்தைக் காட்டுவதற்குக் காரணம் பல்வேறு சாதியப் பிரிவினருக்கு அரசு கொடுக்கக்கூடிய சலுகைகள் தான் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யார் எந்த நம்பிக்கையைப் பின்பற்றினாலும், தர்மத்தை யார் காக்கிறார்களோ? அவர்களைத் தர்மம் காக்கும் என குறிப்பிட்டு தனது தீர்ப்பை நீதிபதி அனிதா சுமந்த் நிறைவு செய்துள்ளார்.

இதையும் படிங்க:தலைமைப் பொறுப்பில் பெண்கள் நியமனம்.. தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தடுத்த நகர்வு!

ABOUT THE AUTHOR

...view details