தமிழ்நாடு

tamil nadu

மனதை மகிழ்ச்சியாக்கும் மெஹந்தி போட்டி... தஞ்சையில் சுவாரஸ்யம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2024, 2:18 PM IST

Mehndi Competition: தென்னிந்திய மாணவர்கள் அமைப்பு சார்பில் மெஹந்தி போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

Mehndi Competition at Thanjavur
மனதை மகிழ்ச்சியாக்கும் மெஹந்தி போட்டி

தஞ்சையில் நடந்த மெஹந்தி போட்டி

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள கல்லூரி மாணவிகளின் தனித்திறமையை ஊக்குவிக்கும் வகையில், சவுத் இந்தியன் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் (South Indian Students Union) சார்பில், முதல் முறையாக மாவட்ட அளவிலான மெகா மெஹந்தி போட்டி கடந்த ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்றது.

இதில் கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தங்களின் திறமைக்கு ஏற்றவாறு கைகளில் மெஹந்தி இட்டு ஓவியத்தை வரைந்தனர். இந்த போட்டியின் நடுவர்களாக திருச்சியைச் சேர்ந்த பேஷன் டெக்னாலஜி விரிவுரையாளர் ஹேமாகிருஷ்ணமூர்த்தி, அழகு சாதனவியல் பயிற்சியாளர் தஞ்சை வனிதா ஆகியோர் கலந்து கொண்டு, சிறந்த மெஹந்தி இட்டவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து, அழகான கலைத்திறனுடன் மெஹந்தி வரைந்த தஞ்சை கோமதி முதல் இடத்தை பிடித்து ரூ.2,500 ரொக்கப் பரிசையும், அதேபோல 2ஆம் இடத்தைப் பிடித்த தஞ்சை காயத்ரி ரூ.1,500 ரொக்கப் பரிசையும், மூன்றாம் இடத்தைப் பிடித்த வழுத்தூர் ஹனேன் மெகதே ரூ.1,000 ரொக்கப் பரிசையும் தட்டிச் சென்றனர். முன்னதாக, இந்தப் போட்டியை தஞ்சை மாநகராட்சி மேயர் இராமநாதன், செளத் இந்தியன் ஸ்டூடன்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர் ஹரிகரன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

மருதாணி டூ மெஹந்தி: ஆதிகாலத்தில் கைகளில் மருதாணி இடும் பழக்கம் இருந்து வந்தது. இந்த மருதாணியை கை கால்களில் இடுவதால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்துவதோடு, மனதுக்கு மகிழ்ச்சியையும் அளிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், மருதாணி எடுத்து அரைத்து இட்ட காலம் மாறி, தற்போதைய நவநாகரீக உலகத்தில் பெண்கள் மெஹந்தி (Cone) இடுவது வழக்கமாகிவிட்டது.

கடந்த காலத்தில் இவை மருதாணி என்று அழைக்கப்பட்டு, வீட்டில் நடைபெறும் விசேஷ காலங்கள் மற்றும் திருமணத்தின் போது பெண்கள் தங்களது கை மற்றும் கால்களில் இடுவது வழக்கம். அத்தகைய வழக்கம் இன்றும் தொடர்ந்து, நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப மாறி புதுப்புது டிசைன்களில் கைகளில் மெஹந்தி இடுவது வாடிக்கையாகிவிட்டது.

பெண்களுக்கு வருவாய் ஈட்டித்தரும் மெஹந்தி: மெஹந்தி இடுவதற்காக அதனை கற்றுக்கொண்டு, அதை பலர் தங்களது பொருளாதார வருவாயை ஈட்டும் வகையில் பயன்படுத்திக் கொண்டும் வருகின்றனர். மணப்பெண்ணுக்கு இடும் மெஹந்தி (Bridal Mehandi) தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது.

இதற்கு பல்வேறு இடங்களில் போதிய வரவேற்பும் உள்ளது. இதனால் மகளிர் உள்பட பலரும் இந்த தொழிலைக் கற்று தங்களது வருவாயை இதன் மூலம் பெருக்கிக் கொள்கின்றனர். மெஹந்தி இடுதலில் நார்மல், அரபிக், கலர், பிளாக், பாரம்பரிய மெஹந்தி என பல்வேறு வகைகள் உள்ளன.

இது குறித்து பேஷன் டெக்னாலஜி விரிவுரையாளர் ஹேமாகிருஷ்ணமூர்த்தி கூறுகையில், "அனைத்து பெண்களுக்கும் சுய தொழில் கிடைக்கும் வகையில் இவை கற்றுத் தரப்பட்டு, போட்டிகள் நடத்தப்படுகின்றன. மெஹந்தி என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு கலை. ஏனெனில் அனைத்து பெண்களுக்கும் ரங்கோலி உள்ளிட்டவை தெரியும். இதன் மூலம் பெண்களுக்கு வருமானம் ஈட்டித் தர முடியும். இதன் மூலம் தொழில் வாய்ப்பை பெருக்கிக் கொள்ளலாம்" என தெரிவித்தார். இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது கைகளில் அழகிய மெஹந்தி இட்டுச் சென்றனர்.

இதையும் படிங்க: திருச்சி சட்டப் பல்கலையில் குளிர்பானத்தில் சிறுநீர் கலந்த விவகாரம்; 2 மாணவர்களுக்கு செமஸ்டர் எழுத தடை!

ABOUT THE AUTHOR

...view details