தமிழ்நாடு

tamil nadu

சீட் தராவிட்டால் திமுக கூட்டணியில் இருந்து விலகலா? - துரை வைகோ திட்டவட்டம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 6:03 PM IST

durai vaiko : திமுக கேட்ட சீட் கொடுக்காவிட்டாலும் கூட்டணியில் இருந்து வெளியில் வர மாட்டோம் எனவும் மிகப்பெரிய குற்றவாளிகள் எல்லாம் போய் சேர்வது பாஜகவில் தான் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

துரை வைகோ பேச்சு
துரை வைகோ பேச்சு

துரை வைகோ பேச்சு

கோயம்புத்தூர்:கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் தேர்தல் நிதி அளிப்பு கூட்டத்தில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ பங்கேற்றார். நிகழ்ச்சியின் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "தேர்தல் பத்திரம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது பாஜக அரசுக்கு கொடுத்த கூடிய சம்மட்டி அடியாக பார்க்கிறேன்.

12 ஆயிரம் கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக அரசியல் கட்சிகள் பெற்றுள்ளன. இதில் 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் பா.ஜ.க மட்டும் பெற்றுள்ளது. 90 விழுக்காடு நிதியை தேர்தல் பத்திரம் மூலமாக வாங்கி இருக்கின்றது, மீதமுள்ள தொகையினை 30க்கும் மேற்பட்ட கட்சிகள் வாங்கி இருக்கின்றன.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். மத்தியில், மாநிலத்தில் ஆளுகின்ற கட்சிகள் மட்டும் ஒரு தரப்பாக தேர்தல் பத்திரம் போய்விடக்கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் ஒருமித்த கருத்துடன் அனைத்து கட்சிகளும் இருக்கின்றோம். 2024ல் மீண்டும் மோடி வந்து விடக்கூடாது. மதவாத சக்திகளுக்கு வாய்ப்பு கொடுத்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை. அதிமுக பாஜகவை எதிர்ப்பதை வரவேற்கின்றோம். பா.ஜ.க எதிர்ப்பை அடுத்து வரக்கூடிய காலத்தில் மக்களும் நம்ப வேண்டும். நாங்களும் நம்ப வேண்டும். மதவாதசக்திகளை அகற்ற வேண்டும் என்பதற்காகவே திமுக, மதிமுக கூட்டணி உருவாக்கியது. சீட்டுகளுக்காக உருவான கூட்டணி கிடையாது.

யாரெல்லாம் பாஜகவை எதிர்க்கின்றார்களோ அவர்களை அமலாக்கத்துறை , சிபிஐ போன்ற ஒன்றிய அரசின் ஸ்தாபனங்கள் மூலம் நெருக்கடி கொடுக்கிறது. 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும்.
கடந்த முறை ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதி உறுப்பினர்கள் பெற்றிருந்தோம். இந்த முறை கூடுதலாக ஒரு மக்களவை தொகுதி வேண்டும் என திமுக தலைமையிடம் கேட்டு இருக்கின்றோம்.

திமுக கூட்டணியில் இருந்து வெளியில் வர மாட்டோம், கேட்ட சீட் கொடுக்காவிட்டாலும் கூட்டணியில் இருந்து வெளியில் வர மாட்டோம். நாட்டில் பாதுகாப்பிற்கு மோடி அரசு தேவை என அண்ணாமலை சொல்லி இருக்கிறார்.
2014 முதல் தறபோது வரை 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

விவசாயிகளின் மீது கண்ணீர் புகை குண்டு வீசி கடுமையான அடக்குமுறை செய்து கொண்டு இருக்கின்றனர்.
மத அரசியலை வைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என பா.ஜ.க நினைக்கின்றது. விவசாயிகள் உயிரிழப்பு, வேலையில்லா திண்டாட்டம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, இதனால் பொருட்களின் விலை உயர்வு இந்த ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் ஏற்பட்டுள்ளது.

திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் திராவிட இயக்க கொள்கைகளால் தான் படிப்பறிவு,கல்வி அறிவு, வேலைவாய்ப்பு உள்ளிட்டு பல்வேறு துறைகளில் கோலோச்சி கொண்டிருக்கின்றனர். வடமாநிலத்தில் இருந்து வேலைக்காக இங்கே வருகின்றனர். பாஜக சொல்வதை போல திராவிட இயக்க கொள்கைகளால் தமிழ்நாடு பாலாகி போனது என்றால், வட மாநிலத்திலிருந்து ஏன் இங்கே பிழைப்பு தேடி வருகின்றனர்.

தமிழகத்தில் நிதி நிறுவன மோசடிகள், கோயில் சொத்துக்களை அபகரிப்பது,மிகப்பெரிய குற்றவாளிகள் என அனைவரும் போய் சேர்வது பாஜகவில் தான், நாட்டை இவர்களிடம் இருந்துதான் பாதுகாக்க வேண்டும். மணிப்பூரில் நடந்த கலவரத்துக்கு காரணம் பாஜக தான்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் பெற கடைசி நாள்: அமைச்சர் முத்துசாமி சொன்ன தகவல் என்ன?

ABOUT THE AUTHOR

...view details