தமிழ்நாடு

tamil nadu

கில்லியில் சொல்லி அடித்த இல்லத்தரசிகள்.. மதுரை அருங்காட்சியக பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுக்கு அமோக வரவேற்பு! - Madurai Museum Traditional Games

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 6:49 PM IST

Updated : May 15, 2024, 7:02 PM IST

Traditional sports competition at Madurai Museum: போராடுவது தான் முக்கியம் என்பதை இந்த விளையாட்டுகள் கற்றுக் கொடுப்பதாக மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய பெண்கள் கூறியுள்ளனர்.

கிட்டி விளையாடியோர் மற்றும் மருதுபாண்டியனின் புகைப்படங்கள்
கிட்டி விளையாடியோர் மற்றும் மருதுபாண்டியனின் புகைப்படங்கள் (Credits to ETV Bharat Tamil Nadu)

கிட்டி விளையாடியோரின் பேட்டிகள் (Credits to ETV Bharat Tamil Nadu)

மதுரை:மதுரை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியின் 5ஆம் நாளான இன்று (மே 15), கில்லி விளையாட்டில் குடும்பத் தலைவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியகம், கடந்த மே 11ஆம் தேதி முதல் பாரம்பரிய விளையாட்டுகளில் போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் பல்லாங்குழி, தாயம், தட்டாங்கல், நொண்டி என பல்வேறு விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. இதில் வயது வித்தியாசம் இன்றி அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்று அசத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 5ஆம் நாளான இன்று கில்லி என்று அழைக்கப்படும் கிட்டி புல் விளையாட்டில், வயது வாரியாக போட்டிகள் நடைபெற்றன. இதில் மதுரை மாநகர் மட்டுமன்றி, மேலூர், அழகர் கோயில் உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள், குழந்தைகள், வயதானோர் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.

இது குறித்து போட்டியில் பங்கேற்ற மதுரை ஆத்திகுளத்தைச் சேர்ந்த அழகு தெய்வானை என்பவர் கூறுகையில், “இன்று விளையாடிய கிட்டி புல் விளையாட்டின் மூலமாக 40 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது. பல்லாங்குழி, தாயம் போன்ற விளையாட்டுகளை நமது வீட்டுக்குள்ளேயே விளையாடலாம். இவையெல்லாம் மிக அறிவுப்பூர்வமான விளையாட்டு. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மதுரை அரசு அருங்காட்சியகம் நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

தொடர்ந்து, மதுரை மாவட்டம் அழகர் கோயிலைச் சேர்ந்த ரோகினி பேசுகையில், “சிறுவயதில் கிராமத்தில் நாங்கள் விளையாடிய விளையாட்டை இன்று காணும் போது மிக மகிழ்ச்சியாக உள்ளது. நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் இந்த விளையாட்டுகளை கற்றுக் கொடுத்து, அவர்களும் விளையாட ஊக்குவிக்க வேண்டும். உடம்பிற்கும், மூளைக்கும் நல்ல பயிற்சி அளிக்கக் கூடிய விளையாட்டுகள் நமது பாரம்பரிய விளையாட்டுகள் தான்” என்றார்.

தொடர்ந்து மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த சுகாசினி ராஜி பேசியபோது, “நடைபெற்ற அனைத்து பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் மிக வித்தியாசமான முறையில் இருந்தன. குழந்தைகளுக்கு பொழுது போக்குவதற்கு ஏற்ற விளையாட்டுக்கள் இவை. இன்று நடைபெற்ற கிட்டிப்புல் விளையாட்டு இதுவரை நான் விளையாடியது இல்லை.

தற்போதைய கிரிக்கெட் விளையாட்டுக்கு இந்த கிட்டிப்புல் தான் முன்னோடி என்கிறார்கள். இந்த விளையாட்டுகளில் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் ஒரு நல்ல பாடம் அதன் மூலம் நாம் கற்றுக் கொள்ள முடிகிறது. போராடுவது தான் முக்கியம் என்பதை இந்த விளையாட்டுகள் கற்றுக் கொடுக்கின்றன” என்றார்.

மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மீ.மருதுபாண்டியன் இது குறித்து பேசுகையில், “பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் குறித்த அறிவிப்பின்போது பொதுமக்கள் இதனை எவ்வாறு வரவேற்பார்கள் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், கடந்த ஐந்து நாட்களாக இப்போட்டிகளில் பங்கேற்ற அனைத்து தரப்பினரையும் பார்த்தபோது, எங்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது.

ஆகையால், தொடர்ச்சியாக நமது மரபு சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட ஊக்கமளித்துள்ளது. அந்த அடிப்படையில் மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியகம் சார்பாக பனை நுங்கு வண்டி செய்து விளையாடுவது குறித்த பயிற்சி அளிக்கவும், பெண்களுக்கு கோலப்போட்டி நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும்” என்றார்.

இதையும் படிங்க: தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஸ்கேட்டிங் போட்டிக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் பள்ளி மாணவன்.. தமிழக அரசுக்கு மாணவனின் பெற்றோர் கோரிக்கை! - Tenkasi Student

Last Updated : May 15, 2024, 7:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details