தமிழ்நாடு

tamil nadu

தாக்குதலின் போது சிதைந்த 17 வயது சிறுவனின் முகத்தில் தழும்பு கூட இல்லாமல் சிகிச்சை அளித்த மீனாட்சி மிஷன் மருத்துவர்கள்! - Madurai Meenakshi Mission Hospital

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 11:15 AM IST

Madurai Meenakshi Mission Hospital: தாக்குதலால் காயமடைந்த 17 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றியதோடு மட்டுமின்றி, சிதைந்த அவரது முகத்தோற்றத்தையும் மீட்டெடுத்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவ வல்லுநர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Madurai Meenakshi Mission Hospital
Madurai Meenakshi Mission Hospital

மீனாட்சி மிஷன்

மதுரை:மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ வல்லுநர்கள், தாக்குதலுக்கு ஆளான 17 வயது சிறுவனுக்கு சுமார் 8 மணி நேரத் தொடர் அவசர அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு உயிரைக் காப்பாற்றியதோடு மட்டுமின்றி, சிதைந்த அவரது முகத்தோற்றம் மற்றும் உறுப்புகளின் செயல்பாடுகளையும் முழுமையாக மீட்டெடுத்துள்ளனர். அறுவை சிகிச்சை நடைபெற்று சுமார் 5 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, அச்சிறுவன் முழுமையாக குணமடைந்தார். முகத்தில் ஒரு தழும்பு கூட இல்லாமல் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது, கமுதியைச் சேர்ந்த 17 வயது பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவனை, தெரிந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். அதில் முகம் மற்றும் கழுத்தில் பல இடங்களில் ஆழமான வெட்டுக் காயங்களால், முகம் சிதைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, அவரது உடலில் உள்ள தசைகள், எலும்பு மற்றும் மூச்சுக்குழாய் ஆகியவை வெளியே தெரிந்து, நோயாளியின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்துள்ளது.

மீனாட்சி மிஷன் மருத்துவர்கள் புதிய சாதனை: அதிகப்படியான ரத்த இழப்பு ஏற்பட்டதாலும், சுவாசிப்பதில் தடை ஏற்பட்டதாலும், அவருக்கு எந்த நேரத்திலும் ஹைபோவோலெமிக் (hypovolemic) ஷாக் ஏற்படும் நிலை காணப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவரது உடலில் உள்ள திசுக்கள் மற்றும் உறுப்புகள் செயல்பட போதுமான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பெற முடியாத ஆபத்தான நிலையும் காணப்பட்டுள்ளது. இதற்கிடையிலும், பல துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களின் ஒத்துழைப்புடன் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து பல அவசர அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதையடுத்து, தீவிர சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அவரது உயிரைக் காப்பாற்றியது மட்டுமின்றி, அவரது முகத்தோற்றம் மற்றும் உடல் இயக்கத்தையும் மீட்டெடுத்துள்ளனர். இந்த மருத்துவக் குழுவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, பல் அறுவை சிகிச்சை, நரம்பியல் அறுவை சிகிச்சை, காது மூக்கு தொண்டை (ENT), வாஸ்குலர் அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மற்றும் மயக்க மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் என மாபெரும் குழுவே இடம் பெற்றுள்ளது.

துல்லியமான சிகிச்சை: இதுகுறித்து, ENT துறையின் தலைவர் மற்றும் முதுநிலை வல்லுநர் டாக்டர் நாகேஸ்வரன் கூறுகையில், "நோயாளி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டவுடன், வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டார். முதலில் முகம் மற்றும் கழுத்தில் தையல் போடப்பட்டு ரத்தம் வெளியேறுவது நிறுத்தப்பட்டது. பின்னர் அவருக்கு புது ரத்தம் பல முறை ஏற்றப்பட்டது. இது நோயாளியைச் சீராக வைத்திருக்க உதவியது.

சுவாசத்தைச் சரிசெய்ய, ENT அறுவை சிகிச்சை நிபுணர் ட்ரக்கியோஸ்டமி (tracheostomy) எனப்படும் சிகிச்சையை அளித்தார். அவரது கழுத்தின் முன்புறத்தில் ஒரு துளையை உருவாக்கி, ஒரு குழாய் (ட்ரக்கியோஸ்டமி குழாய் என்று அழைக்கப்படுகிறது) அந்த துளைக்குள் செருகப்பட்டு, சுவாசிப்பதற்கு மாற்றுச் சுவாசப்பாதையை உருவாக்கினார். முகத்தில் வடு உருவாவதைக் குறைக்க பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் சதை அடுக்குகளில் காயத்துக்கு மிகவும் துல்லியமாகச் சிகிச்சை அளித்தார்.

உடனடியாக காயத்தை மூடியதால் நோய்த்தொற்றின் விகிதம் குறைக்கப்பட்டது. அவரது தோற்றத்தை மீட்டெடுக்க நவீன ஒப்பனை சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. மேலும் அவரது முகத்தில் ஏற்பட்ட வீக்கமும் சரி செய்யப்பட்டது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் முகத்தோற்றத்தை மீட்டெடுக்க ட்ராமா டாட்டூ சிகிச்சை அளித்தார்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பல் மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் அறுவை சிகிச்சைத் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை வல்லுநர் டாக்டர் ஜிப்ரீல் ஒய்சுல், "மாக்சில்லரி நரம்பு மற்றும் தாடை எலும்புகளின் முறிவுகள், டைட்டானியம் தகடுகள் மற்றும் மைக்ரோ ஸ்குரூக்களை பயன்படுத்தி ஓப்பன் ரிடக்ஷன் (OR ) மற்றும் இன்டெர்னல் பிக்சேஷன் (IF) ஆகியவற்றை உள்ளடக்கிய நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.

வாய், தாடைகள், முகம் மற்றும் கழுத்து தொடர்பான பல்வேறு வகையான சிகிச்சையளிப்பதில் வல்லமை பெற்ற ஓரல் மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் அறுவை சிகிச்சை குழு, தாடையின் சீரமைப்பு மற்றும் நிலைப்பாடு மற்றும் கீழ் தாடையின் பல்வேறு இயக்கங்கள் தொடர்பான பிரச்சினைகளைச் சரி செய்தது" என்றார்.

ஒரே வாரத்தில் டிஸ்சார்ஜ்: இதுகுறித்து பேசிய பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் தலைவர் மற்றும் முதுநிலை வல்லுநர் டாக்டர் பினிட்டா ஜெனா, "உடைந்த முக எலும்புகளை சீரமைத்த பிறகு, காதுக்கு அருகில் அமைந்துள்ள பெரிய உமிழ்நீர் சுரப்பியான பரோடிட் சுரப்பியின் செயல்பாடுகள் மற்றும் முகபாவனையின் தசைகளை கட்டுப்படுத்தும் தன்மை ஆகியவை புத்துயிர் பெற்றது. திசு மேலாண்மை மற்றும் முக அமைப்புகளை முடிந்தவரை சீரமைத்தல் என இந்த அறுவை சிகிச்சையின் ஒட்டுமொத்த நோக்கமும் பொது மயக்க மருந்துகளின் கீழ் செய்யப்படுகிறது.

தொடர்ந்து இந்த நோயாளி சில நாட்கள் ஐசியூவில் இருந்தார். அவருக்கு நரம்பு வழி நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி நிவாரணிகள் மற்றும் பிற ஆதரவு நடவடிக்கைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. நோயாளியின் நிலை படிப்படியாக மேம்படத் தொடங்கியது. அவர் ஒரே வாரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இப்போது அவர் இயல்பான வாழ்க்கையை வாழ்கிறார்" எனத் தெரிவித்தார்.

சரியான நேரத்தில் சிகிச்சை அவசியம்: சிகிச்சைகள் மற்றும் பலன்களைப் பற்றி மருத்துவ நிர்வாகி டாக்டர் கண்ணன் கூறுகையில், "தாடை (மாக்சில்லா) மற்றும் முகம் (முகப்பகுதி) சம்பந்தப்பட்ட காயங்கள் - ஒட்டுமொத்தமாக மாக்ஸில்லோஃபேஷியல் காயங்கள் என்று அழைக்கப்படும். சிக்கலான உடற்கூறியல் கட்டமைப்புகள் காரணமாக இது ஒரு தீவிர மருத்துவப் பிரச்சனையாக இருந்தது. இந்த சிறுவனைப் போலவே, மாக்ஸில்லோஃபேஷியல் பகுதியில் ஏற்படும் அதிர்ச்சியும் சுவாசப்பாதைகளைப் பாதிக்கிறது. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

எங்களின் பலதரப்பட்ட அணுகுமுறை, சரியான நேரத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியதன் மூலம், நோயாளியின் உயிரைக் காப்பாற்றவும், முக்கிய உறுப்புகளின் இயக்கத்தைப் பாதுகாத்து மீட்டெடுக்கவும், அழகியல் சார்ந்த விளைவுகளை அடையவும் முடிந்தது" எனத் தெரிவித்தார்.

மாக்ஸில்லோஃபேஷியல் சாதனை:ஒருவருக்கொருவர் அறிமுகமாவதில் முகம் என்பது மிகவும் முக்கியமானது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் தாக்குதல் நிகழ்வுகளில் காயங்களுக்கு மாக்ஸில்லோஃபேஷியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாக்ஸில்லோஃபேஷியல் காயங்களுக்கு முக்கிய காரணங்கள் சாலை போக்குவரத்து விபத்துகள், வன்முறை, விளையாட்டு காயங்கள் மற்றும் தொழில்சார் ஆபத்துகள் ஆகும்.

மாக்ஸில்லோஃபேஷியல் காயம் உள்ள நோயாளிகள் மிகவும் சிதைந்த தோற்றத்துடன் உள்ளனர். இது பெரும்பாலும் உளவியல், உடல் மற்றும் ஒப்பனை குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. ஆனாலும், மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள நிபுணர் குழுவினர் காய மேலாண்மை, மறு சீரமைப்பு அறுவை சிகிச்சையில் அதிநவீன நுட்பங்களைப் பயன்படுத்தி காயங்களை முற்றிலும் குணப்படுத்தி சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: திடீர் மாரடைப்புக்கு கரோனா தடுப்பூசி காரணமா? மத்திய சுகாதார அமைச்சர் கூறும் விளக்கம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details