தமிழ்நாடு

tamil nadu

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட கோரிக்கை; மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2024, 8:26 AM IST

Keeladi Excavation: கீழடியில் முதல் 2 கட்ட அகழாய்வு குறித்த 982 பக்கமுள்ள அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட உத்தரவிடக்கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Madurai High Court order to central govt response to release of a keeladi excavation statement
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட கோரிக்கை

மதுரை:மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், சிவகங்கை மாவட்டம், கீழடியில் 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை மத்திய அரசு சார்பில் அகழாய்வு பணியினை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்டார்.

இந்த அகழாய்வின் போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்தன. இந்நிலையில் திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து ஸ்ரீராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, 3ஆம் கட்ட அகழாய்வில் குறிப்பிடும் படியான கண்டுபிடிப்புகள் இல்லை எனத் தெரிவித்தார்.

முதல் 2 கட்ட கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசிடம் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையில், கீழடியில் நிலவிய கலாச்சாரம், விவசாயம் செய்த பயிர்கள், விலங்குகள், நகர நாகரீகத்தை நோக்கி நகர்ந்த தன்மை குறித்து விரிவாகத் தெரிவித்துள்ளார்.

கீழடியில் கிடைத்த பொருட்களை ரேடியோ கார்பன் எனும் பகுப்பாய்வு முறையில் ஆய்வு செய்ததில் அவை கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தையது எனத் தெரியவந்தது. கீழடியில் தற்போது 4 முதல் 9ஆம் கட்ட அகழாய்வு பணிகளை மாநில அரசு மேற்கொண்டு, அதுதொடர்பான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

ஆனால் மத்திய அரசு மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வு பணிகள் குறித்த அறிக்கை இதுவரை வெளியிடவில்லை. அந்தவகையில், 982 பக்கமுடைய அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை மத்திய அரசு பொதுவாக வெளியிட்டால் மட்டுமே கீழடி தொடர்பான தெளிவான வரலாற்று முடிவுகள் கிடைக்கும்.

எனவே, கீழடியில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வு தகவல்கள் அடங்கிய விரிவான அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு 4 வாரங்களுக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:கூட்டணிக்கான கதவுகளை திறந்து வைத்திருக்கும் அமித்ஷா! எடப்பாடி பழனிசாமிக்கு இறுதி அழைப்பா?

ABOUT THE AUTHOR

...view details