தமிழ்நாடு

tamil nadu

மதுரையில் 3 மாதங்களில் 2,931 கிலோ‌ தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 10:18 AM IST

Madurai city police: மதுரையில் கடந்த 3 மாதங்களில், அரசால் தடை செய்யப்பட்ட 2 ஆயிரத்து 931 கிலோ‌ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

குட்கா பறிமுதல்
மதுரை காவல்துறை

மதுரை:மதுரை மாநகர காவல் துறை, உணவுப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து, கடந்த நவம்பர்-2023 மாதம் முதல் ஜனவரி-2024 வரை நடத்திய போதைப் பொருள் தடுப்பு சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட 2 ஆயிரத்து 931 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு, 955 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என மதுரை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மதுரை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, "மதுரையில் கடந்த நவம்பர் 22ஆம் தேதி, உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் மாநகர காவல் துறை இணைந்து, தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் உத்தரவின்பேரில், 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் சோதனை நடத்தினா்.

போதை பொருள்கள் சோதனை:தனிப்படை போலீஸாா், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் இணைந்து, கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, மதுரை மாநகரில் 172 முறை சோதனை நடத்தியதில், 2 ஆயிரத்து 398 கடைகள் சோதனை செய்யப்பட்டு, 2 ஆயிரத்து 931 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்ததாக 931 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 955 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், உணவு பாதுகாப்பு துறை சார்பாக 106 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. கடை உரிமையாளா்களுக்கு இதுவரை ரூ. 4 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபராதம்:கடந்த காலங்களில் உணவு பாதுகாப்பு துறை விதிகளின்படி, முதல் முறையாக குற்றச்செயல்களில் ஈடுபடும் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், இரண்டாவது முறை ரூ.10 ஆயிரம் அபராதமும், மூன்றாவது முறையும் அதே குற்றத்தை செய்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, போதை பொருள்களை விற்பனை செய்த கடைகளை பூட்டி சீல் வைக்க கால அளவு நிர்ணயம் செய்யப்படவில்லை.

உறுதி மொழிப்பத்திரம்:உணவு பாதுகாப்பு துறை, கடந்த ஜனவரி 4 ஆம் தேதி முதல், சட்டம் மற்றும் விதிகளில் மாற்றம் செய்து, முற்றிலும் போதைப் பொருள் விற்பனையை தடுக்கும் நோக்கில், முதல் முறையாக குற்றச்செயல்களில் ஈடுபடும் போதைப்பொருள் விற்பனையாளர்களின் கடையை சீல் வைத்து, 15 ஆவது நாள் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து, குற்றத்தில் ஈடுபட்ட நபர் ரூ.100 முத்திரைத்தாளில் நோட்டரி முன்பு, இனிமேல் குட்கா பொருள் விற்க மாட்டேன் என உறுதி மொழிப்பத்திரம் எழுதி கொடுத்த பின் கடை திறக்க அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதே போன்று, 2 ஆவது முறையாக, மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடும் போதைப்பொருள் விற்பனையாளர்களின் கடையை சீல் வைத்து 30ஆவது நாள் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, ரூ.200 முத்திரைத்தாளில் நோட்டரி முன்பு, உறுதி மொழிப்பத்திரம் கொடுத்த பின் கடை திறக்கப்படும்.

அதனைத்தொடர்ந்து, மூன்றாவது முறையாக மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடும் போதைப்பொருள் விற்பனையாளர்களின் கடையை சீல் வைத்து 90 ஆவது நாள் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, ரூ 500 முத்திரைத்தாளில் நோட்டரி முன்பு, உறுதி மொழிப்பத்திரம் எழுதி கொடுத்த பின் கடை திறக்க அனுமதிக்கப்படும்.

காவல்துறை சம்மந்தப்பட்ட போதை பொருள்கள் விற்பனையாளர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை. இதன்மூலம் தற்பொழுது போதைப்பொருட்கள் வைத்திருத்தல், கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல் வெகுவாக தடுக்கப்பட்டுள்ளது” என மதுரை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்: போலீசாரின் வழக்குப்பதிவில் வெளியான தகவல்!

ABOUT THE AUTHOR

...view details