தமிழ்நாடு

tamil nadu

“நீட் ஆடை கட்டுப்பாட்டில் மாணவிகள் சானிட்டரி நாப்கின் அணிந்திருக்க அனுமதி வழங்கியிருக்க வேண்டும்” - உயர் நீதிமன்றக்கிளை! - NEET Exam Napkin exemption

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 9:55 PM IST

Participate in NEET exam wearing a diaper: நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவி, நீட் தேர்வின் போது டயபர் அணிந்து பங்கேற்க அனுமதிக்கக் கோரிய வழக்கில், தேர்வு மைய அதிகாரிக்கு உரிய உத்தரவு பிறப்பிப்பதாக தேசிய தேர்வு முகமை உறுதியளித்ததைத் தொடர்ந்து வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

student-applied-has-filed-a-case-in-hc-madurai-bench-seeking-permission-to-participate-in-neet-exam-wearing-a-diaper
டயபர் அணிந்து நீட் தேர்வு எழுத அனுமதி கோரிய வழக்கு: தேசிய தேர்வு மையம் உறுதியளித்ததைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைப்பு!

மதுரை:நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள 19 வயது மாணவி ஒருவர், மே 5-இல் மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறும் நீட் தேர்வின் போது டயபர் அணிந்து பங்கேற்கவும், தேவைப்படும்போது டயபர் மாற்றிக் கொள்ள அனுமதிக்கவும் உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "மனுதாரர் 4 வயதில் தீ விபத்தில் சிக்கியுள்ளார். அதிலிருந்து அவர் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். இதனால், அவர் தொடர்ந்து டயபர் அணிந்திருக்க வேண்டும், அடிக்கடி டயபர் மாற்றிக் கொள்ள வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனால், தனது உடல் நிலையைக் குறிப்பிட்டு தேர்வு முகாமில் டயபர் அணிந்திருக்கவும், தேவைப்படும் போது டயபர் மாற்றிக்கொள்ளவும் அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். நீட் தேர்வு நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. நீட் தேர்வு மையங்களுக்குத் தேர்வர்கள் கடுமையான சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் வரம்பற்ற சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

நீட் தேர்வு எழுதுவோரின் ஆடை கட்டுப்பாட்டில் மனுதாரர் சந்திக்கும் பிரச்சினை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. மனுதாரர் எப்போதும் டயபர் அணிந்திருக்க வேண்டும். அதை அடிக்கடி மாற்றிக்கொள்ள வேண்டும். இதனால், அவர் கழிப்பறைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும். இந்த சலுகை மறுக்கப்பட்டால், அவரால் நீட் தேர்வு எழுத முடியாமல் போகும். இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான பாகுபாட்டுக்கு வழிவகுக்கும்.

நீட் தேர்வர்களுக்கான ஆடை கட்டுப்பாட்டில் மாணவிகள் சானிட்டரி நாப்கின் அணிந்திருக்க அனுமதி வழங்கியிருக்க வேண்டும். அது இல்லாததால், மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதை மனதில் வைத்து நீட் தேர்வு மையங்களில் மாணவிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதில் அதிகாரிகள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த வழக்கில் மனுதாரரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, மனுதாரரின் கோரிக்கையைத் தேசிய தேர்வு முகமை ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக தேர்வு மைய அதிகாரிக்கு உரிய உத்தரவு பிறப்பிப்பதாக தேசிய தேர்வு முகமை உறுதியளித்துள்ளது. இதைப் பதிவு செய்து கொண்டு வழக்கு முடிக்கப்படுகிறது" என உத்தரவில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம்- உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்! - Covishield Vaccine Side Effects

ABOUT THE AUTHOR

...view details