தமிழ்நாடு

tamil nadu

மன்னார் வளைகுடா பகுதியில் ஆழ்கடலில் சங்கு எடுக்க அனுமதி வழங்கக்கூடாது - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 4:47 PM IST

Gulf of Mannar: மன்னார் வளைகுடா பகுதியை கடல் வாழ் உயிர்கோள காப்பகம் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டு, அதற்கான எல்லை இதுவரை வரையறை செய்யாததால், ஆழ்கடலில் சங்கு எடுக்க மீனவர்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை:தூத்துக்குடி நாட்டுப்படகு ஏரல் மீன்பிடி தொழிலாளி நலச்சங்க செயலாளர் ஜான்சன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “இராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை 350 கி.மீ கடல் பரப்பில், 10 ஆயிரத்து 500 சதுர கி.மீ பரப்பளவை மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிர்கோள காப்பகமாக, மத்திய அரசு கடந்த 1989-ஆம் ஆண்டு அறிவித்தது. இப்பகுதியில் 4 ஆயிரத்து 223 கடல் வாழ் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதில் அழிந்து வரும் இனமான கடல் பசு, 14 வகை கடல் புற்களும் அடங்கும்.

வான் தீவு, காசுவார் தீவு, காரைச்சல்லி தீவு, விலங்கு சல்லி தீவு, முயல் தீவு உள்ளிட்ட 21 தீவுகளை உள்ளடக்கிய இந்த பகுதியை, பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா கடல் வாழ் தேசிய பூங்காவாக தமிழக அரசு அறிவித்தது. இந்தச் சூழலில், தூத்துக்குடி மாவட்ட கடற்கரையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், ஆழ்கடலில் மூழ்கி பாரம்பரிய சங்கு எடுத்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீன் வளத்துறையும் சங்கு எடுக்க லைசென்ஸ் வழங்கி வருகிறது.

மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிர்க்கோள காப்பகமாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. உயிர்கோள காப்பமாக அறிவிக்கப்பட்ட பிறகும், சங்கு எடுக்க அனுமதி வழங்கி உரிமம் கொடுப்பதால், அரிய கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே, மன்னார் வளைகுடா பகுதியை கடல் வாழ் உயிர்க்கோள காப்பகமாக அறிவித்து உள்ளதால், ஆழ்கடலில் சங்கு எடுக்க அனுமதி வழங்க உரிமம் கொடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மன்னார் வளைகுடா பகுதியை கடல் வாழ் உயிர்க்கோள காப்பகம், தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்த எல்லை இதுவரை வரையறுக்கப்படவில்லை. எனவே, தூத்துக்குடி கடலில் மூழ்கி சங்கு எடுக்க மீன் வளத்துறை உரிமம் வழங்கக்கூடாது என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:காவல்துறை ஏன் இவ்வளவு மெத்தனப் போக்குடன் நடந்து கொள்கிறது? - பணிப்பெண் விவகாரத்தில் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details