தமிழ்நாடு

tamil nadu

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் வழக்கு; மார்ச் 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 2:05 PM IST

Ankit Tiwari: அமலாக்கத்துறை துணை இயக்குனர் அங்கித் திவாரி ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணையை, வரும் மார்ச் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Ankit Tiwari
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை துணை இயக்குனர் அங்கித் திவாரி, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "எனது கைது என்பது விதிமுறைகளுக்கு எதிரானது. நான் கைது செய்யப்பட்டு 80 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளேன். இதுவரை வழக்கில் குற்றபத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. சிறையில் உள்ளதை கருத்தில் கொண்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும். ஜாமீன் வழங்கும் பட்சத்தில், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளையும் முறையாக பின்பற்றுவோம்" என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி விவேக்குமார் சிங் முன்பு இன்று (பிப்.23) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவடிக்குமார், "உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு மட்டுமே இடைக்கால தடை விதித்துள்ளது. அதனால்தான் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.

மேலும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது. இந்நிலையில் அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில், உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பக்கூடும். எனவே, அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது" என எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனையடுத்து அங்கித் திவாரி வழக்கறிஞர், அதுவரை இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் மார்ச் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர் ரக கஞ்சா.. சென்னை விமான நிலையத்தில் தப்பி ஓடிய பயணி!

ABOUT THE AUTHOR

...view details