தமிழ்நாடு

tamil nadu

சர்வதேச கருத்தரங்குகளில் மது விநியோகம்; மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அதிகாரிகள் கண்காணிக்க அறிவுறுத்தல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 9:47 PM IST

Liquor in Public: சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானம் விநியோகிப்பதை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது மதுபானம் விநியோகிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்குவது தொடர்பாக மார்ச் 14ஆம் தேதி திருத்த விதிகளை தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. அதில், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் தனி இடத்தில்தான் மதுபானம் விநியோகிக்க வேண்டும், குறிப்பிட்ட அந்த பகுதியை தவிர வேறு இடங்களில் விநியோகிக்க கூடாது, அந்த இடங்களை பொதுமக்கள் பார்க்காத வகையில் மறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த திருத்த விதிகளை எதிர்த்து, வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, மதுபானத்தை இருப்பில் வைத்து விநியோகிக்கவும், விற்கவும் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், இந்த விதிகள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத நிலையில், இதை செயல்படுத்த முடியாது என வாதிட்டார்.

உரிமம் வழங்கும் முன் அந்த இடத்தை ஆய்வு செய்ய எந்த வழிவகையும் திருத்த விதிகளில் தெரிவிக்கப்படவில்லை என்றும், மதுவிலக்கு சட்டத்தை இதுவரை திருத்தாத நிலையில், பொது இடத்தில் மதுபானம் விநியோகிப்பது குற்றம் என தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.

இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சிறப்பு உரிமம் கோரி விண்ணப்பித்த பின், சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்தால் மட்டுமே உரிமம் வழங்கப்படும் என தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

அதேநேரம், இந்த வழக்கு முடியும் வரை சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மதுபானத்தை விற்பனை செய்யக் கூடாது எனவும், நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களிடம் கூடுதல் கட்டணத்தை வசூலித்து அன்பளிப்பாக மதுபானம் வழங்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், திறந்த வெளியில் மதுபானம் விநியோகிக்கக் கூடாது எனவும், அதற்கென மறைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநியோகிக்க வேண்டும், அந்த பகுதியைத் தாண்டி மதுபானம் விநியோகிக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மறைவான பகுதியில் மட்டுமே மதுபானம் விநியோகிக்கப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், சிறப்பு உரிமம் மூலம் மதுபானம் விநியோகிக்கப்படும் இடங்களில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்க வேண்டும் எனவும், திருத்த விதிகளில் உள்ள பிற நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:சர்வதேச கருத்தரங்குகளில் மது விநியோகம்; புதிய தகவலை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

ABOUT THE AUTHOR

...view details