தமிழ்நாடு

tamil nadu

புதிய தலைமைச் செயலக முறைகேடு விவகாரம்; மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2024, 6:49 PM IST

New Chief Secretariat Scam Case: புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

New Chief Secretariat Scam Case
புதிய தலைமைச் செயலக முறைகேடு வழக்கு

சென்னை: புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த, முந்தைய தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அரசு உத்தரவை ரத்து செய்தார்.

இதை எதிர்த்து, அப்போதைய தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தது. தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கைத் திரும்பப் பெற தமிழக அரசு அனுமதி கோரியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் எம்.பி ஜெ.ஜெயவர்த்தன் இணைப்பு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில் இன்று (பிப்.06) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயவர்த்தன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, "பொது நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் தொடர்பான வழக்கை திரும்பப் பெற அரசுக்கு அதிகாரம் இல்லை.

மேலும், முறைகேடு புகார் தொடர்பாக புலன் விசாரணை நடத்தி, அது முடிவு காண அனுமதிக்க வேண்டுமே தவிர, புலன் விசாரணையை அரசு கைவிட முடியாது. மேல் முறையீட்டு வழக்கைத் திரும்பப் பெற மாநில அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது" என வாதிட்டார்.

இதன் தொடச்சியாக தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "மேல் முறையீட்டு வழக்கைத் திரும்பப் பெற்றாலும், இணைப்பு மனுதாரருக்கு மாற்று நிவாரண வழிகள் உள்ளன. வழக்கை திரும்பப் பெறுவது அரசின் முடிவு" எனக் குறிப்பிட்டார்.

மேலும், ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், ஜெயவர்த்தன் இணைப்பு மனுவை ஏற்கக் கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரிய தமிழக அரசின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:மக்களவையில் மத்திய அமைச்சரை அவமதித்தேனா? டி.ஆர். பாலு விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details