தமிழ்நாடு

tamil nadu

தாம்பரம் காவல் ஆணையர் அலுவலக ஒப்பந்த விவகாரம்; தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 7:16 PM IST

Updated : Feb 10, 2024, 6:32 AM IST

Tambaram Police Commissioner office: எந்த ஒப்பந்தமும் இல்லாமல் தங்கள் கட்டடத்தில் தொடர்ந்து இயங்கி வரும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்து, கட்டடத்தை ஒப்படைக்க கோரிய மனுவுக்கு தமிழக உள்துறை செயலாளரும், தாம்பரம் காவல் ஆணையரும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சரத்குமார், வெங்கடேஷ், சவுத்திரி ஆகியோர் கூட்டாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்துக்காக, சோழிங்கநல்லூரில் தங்களுக்குச் சொந்தமான நான்கு மாடி கட்டடத்தை குத்தகைக்கு வழங்கியதாக கூறியுள்ளனர்.

மாதம் 10 லட்சத்து 14 ஆயிரத்து 300 ரூபாய் என வாடகை நிர்ணயித்து, 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் 11 மாதங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாகவும், காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ஏற்ற வகையில் கட்டடத்தில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் மாற்றி அமைத்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்படி, 2022 ஜனவரி முதல் வாடகை வழங்காமல், பொதுப்பணித்துறை வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில், மாதம் 6 லட்சத்து 8 ஆயிரத்து 438 ரூபாய் வாடகையாக நிர்ணயித்து, அதன் அடிப்படையில், 2022 ஜனவரி முதல் நவம்பர் வரைக்கும் 82 லட்சத்து 16 ஆயிரத்து 824 ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்துக்கு மாறாக வாடகை நிர்ணயித்ததால், மாதத்துக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பைச் சந்தித்ததாகவும், இந்த தொகையை ஏற்றுக் கொள்ளும்படி நிர்பந்தப்படுத்தியதால் பெற்றுக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்த நிலையில், கட்டடத்தை காலி செய்யாமல், 2022 டிசம்பர் முதல் 2023 டிசம்பர் வரைக்குமான காலத்துக்கு வாடகையாக 97 லட்சத்து 10 ஆயிரத்து 792 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதுவரைக்கும் கட்டடத்தை பயன்படுத்தியதற்காக அந்த தொகையை ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அதனால், எந்த ஒப்பந்தமும் இல்லாமல் கட்டடத்தை பயன்படுத்தி வருவது சட்டவிரோதம் என்பதால், அதனை காலி செய்து ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மார்ச் 8ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், தாம்பரம் காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை!

Last Updated : Feb 10, 2024, 6:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details