தமிழ்நாடு

tamil nadu

முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் வழக்கு; காவல்துறை பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - RAJESH DAS CASE

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 5:11 PM IST

Madras High Court: முன்னாள் காவல்துறை சிறப்புக் கூடுதல் இயக்குநர் ராஜேஷ்தாஸ் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

madras high court
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை:கடந்த 2021ஆம் ஆண்டு பெண் எஸ்.பிக்கு பாலியல் தொலை அளித்தது தொடர்பான வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த 2023 ஜூன் 16ஆம் தேதி தீர்ப்பளித்தது.

விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ராஜேஷ்தாஸ்க்கு வழங்கிய தீர்ப்பை, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்து கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் ராஜேஷ் தாஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஷ் தாஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், சரணடைவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ். ராஜ்குமார், மனு குறித்துப் பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 12ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதனையடுத்து, கடந்த மார்ச் 12ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாகா குழுவில் உள்ள ஒருவர் எவ்வித விசாரணையும் இல்லாமல் தன்னைத் தூக்கிலிட வேண்டும் என வாட்ஸ் அப்பில் விமர்சிக்கிறார் எனச் சிறப்பு டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால், பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சிறப்பு டிஜிபி மீதான விசாரணை அறிக்கையை மார்ச் 16ஆம் தேதி தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை உயர் நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ராஜேஸ்தாஸ் தாக்கல் செய்த வழக்கு இன்று (ஏப்.15) விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முன்னாள் காவல்துறை சிறப்புக் கூடுதல் இயக்குநர் ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளை மறுநாள் (ஏப்ரல் 17) ஒத்திவைத்தது.

இதையும் படிங்க:இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் தலைவர்கள்.. இன்று மாலை நெல்லை வரும் பிரதமர் மோடி! - Lok Sabha Election

ABOUT THE AUTHOR

...view details