தமிழ்நாடு

tamil nadu

மதிமுக பம்பரம் சின்னம் தொடர்பான வழக்கு; தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 5:58 PM IST

MDMK Symbol case: எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது இரண்டு வாரத்தில் சட்டத்திற்கு உட்பட்டு முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: மதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 1996ஆம் ஆண்டு முதல் சட்டமன்றம், மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டதாகவும், மதிமுக போட்டியிட்டுள்ளதாகவும், 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 சதவீதத்திற்குக் குறைவான வாக்குகள் பெற்றதாகக் கூறி, கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது போல, எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்திடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பித்ததாக சுட்டிக் காட்டியுள்ளார். இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த நீதிமன்றம், புதிய விண்ணப்பம் அளிக்க மதிமுகவுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (மார்ச் 7) விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், நீதிமன்றத்தின் உத்தரவின்படி மதிமுக சார்பில் புதிதாக விண்ணப்பித்துள்ளதாகவும், அந்த விண்ணப்பம் முறையாக பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதிமுக மனுவிற்கு இரண்டு வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கையும் முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:16 தாசில்தார்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை!

ABOUT THE AUTHOR

...view details