தமிழ்நாடு

tamil nadu

பணியின்போது இறந்த மருத்துவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 5:15 PM IST

Health Minister Subramanaian: பணியின்போது இறக்கும் மருத்துவர்களின் வாரிசுதாரர்கள் இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் ஆகிய 3 வகையான பணியிடங்களுக்கு விண்ணப்பித்தால், பணியாணை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்தில், அரசு மருத்துவர்களின் பங்களிப்புடன் கூடிய சேமநல நிதி 7 கோடி ரூபாயினை, 7 குடும்பங்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு அரசுப் பணிகளில் பணிபுரிந்து வருகின்ற மருத்துவர்கள், எதிர்பாராத வகையில் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பங்களைச் சார்ந்த வாரிசுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கிட, மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு நிதி 2020ஆம் ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.

ஒவ்வொரு மருத்துவரும் விருப்பத்தின் அடிப்படையில் இந்நிதியத்தில் சேர்ந்து, அவரவர்களின் பங்களிப்பாக 2020, 2021ஆம் ஆண்டில் 6 ஆயிரம் ரூபாயினை மொத்தமாக செலுத்தினர். விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதி என்பது, 50 லட்சம் ரூபாய் என்று இருந்ததை 1 கோடி ரூபாயாக உயர்த்தி அரசாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்தார்.

அதனடிப்படையில், மார்ச் 2022ஆம் ஆண்டு முதல் மாதந்தோறும் தமது ஊதியத்திலிருந்து 500 ரூபாய் அவரவர்களுடைய சுயவிருப்பத்தின் அடிப்படையில் பிடித்தம் செய்யப்படும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் 2 ஆயிரம் மருத்துவர்கள் மட்டுமே இணைந்திருந்தனர். தற்போது 11 ஆயிரம் மருத்துவர்கள், அவர்களது ஊதியத்திலிருந்து மாதந்தோறும் 500 ரூபாய் பிடித்தம் செய்வதற்கு ஒப்புதல் அளித்து, இந்த திட்டத்தில் இணைந்து இருக்கின்றனர்.

மற்ற மருத்துவர்களும் படிப்படியாக இத்திட்டத்தில் இணைந்து வருகின்றனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இந்த வசதி தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் கட்டமாக, 2022ஆம் ஆண்டு பணியின்போது உயிரிழந்த 7 மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு, தலா 1 கோடி ரூபாய் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களை பொறுத்தவரை, பணிக் காலத்தில் இறந்தவர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை, கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் அனைத்து துறைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மருத்துவர்களுக்கும், அவர்தம் குடும்பதாரர்களுக்கும் கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் விரைந்து வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க, சம்பந்தபட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் ஆகிய துறைத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருணை அடிப்படையில் மருத்துவர்களின் நேரடி வாரிசுதாரர்களுக்கு பணி வழங்குவதில், அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப பணி வழங்குவதில் விதிமுறைகள் இல்லை. இதில் மூன்று வகையான பணி நியமனங்கள் வழங்குவதில் விதிமுறைகள் உள்ளது. அந்த வகையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் ஆகிய 3 வகையான பணியிடங்களை மருத்துவர்களின் வாரிசுதாரர்கள் விண்ணப்பித்தால், உடனடியாக வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இளநிலை உதவியாளர் பணியிடங்களை பொறுத்தவரை, அதிகமான காலிப்பணியிடங்கள் இல்லாத சூழலில், அந்த பணியிடங்களுக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இளநிலை உதவியாளர் பணியிடமும், தட்டச்சர் பணியிடமும் ஒரே ஊதிய அளவுடையவை.

எனவே, இளநிலை உதவியாளர் பணியிடம் வேண்டி விண்ணப்பிப்பவர்கள் அந்த பணிக்காக காத்திருக்காமல், 6 மாத காலம் தட்டச்சர் பயிற்சி மேற்கொண்டு விண்ணப்பித்தால், தட்டச்சர் பணியிடத்திற்கான ஆணைகள் வழங்கப்படும். எனவே, தட்டச்சர் காலிப்பணியிடங்கள் அதிகம் இருக்கும் சூழ்நிலையில், கருணை அடிப்படையிலான பணியிடங்கள் விரைந்து தருவதற்கு ஏதுவாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணையும் பாஜக எம்எல்ஏக்கள்?... விளக்கமளிக்கும் அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன்!

ABOUT THE AUTHOR

...view details