தமிழ்நாடு

tamil nadu

வேலைநிறுத்த போராட்டம்: சென்னையில் இருந்து லுப்தான்சா ஏர்லைன்ஸ் பயணிகள், சரக்கு விமான சேவை ரத்து!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2024, 4:01 PM IST

Chennai Airport: லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, ஃப்ராங்க் பார்ட்- சென்னை - ஃப்ராங்க் பார்ட் இடையே இயக்கப்படும் பயணிகள் விமான சேவை இரண்டாவது நாளாக இன்று(பிப்.21) ரத்து செய்யப்பட்டுள்ளது.

lufthansa airlines
லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமானம்

சென்னை: சென்னையிலிருந்து ஜெர்மன் நாட்டில் உள்ள ஃப்ராங்க் பார்ட் நகருக்கு, லுப்தான்சா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தினமும் இயக்கப்படுகிறது. நள்ளிரவு 12.10 மணிக்கு சென்னை வரும் இந்த விமானம், மீண்டும் அதிகாலை 1.50 மணிக்கு ஃப்ராங் பார்ட் நகருக்கு புறப்பட்டுச் செல்லும்.

சென்னையிலிருந்து அமெரிக்கா, கனடா, ஜெர்மன் செல்லும் பயணிகள், இந்த விமானத்தைப் பயன்படுத்துவதால், இந்த விமானத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். தினமும் சுமார் 300க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விமானத்தில் பயணிப்பர்.

இந்த நிலையில், ஜெர்மன் நாட்டில் உள்ள லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள், ஊதிய உயர்வு கேட்டு இரண்டாவது நாளாக இன்று(பிப்.21) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்படும் பயணிகள் மற்றும் சரக்கு விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.

இதனால் நள்ளிரவு 11.50 மணிக்கு ஃப்ராங்க் பார்ட் நகரிலிருந்து சென்னை வரும் லுப்தான்சா ஏர்லைன்ஸ் பயணிகள் விமான சேவைகளும், அதிகாலை 1.50 மணிக்கு சென்னையில் இருந்து ஃப்ராங்க் பார்ட் நகருக்கு புறப்பட்டு செல்லும் விமான சேவைகளும் ஆகிய இரு விமான சேவைகள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஃப்ராங்க் பார்ட் நகரில் இருந்து புறப்பட்டு காலை 11.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலைய சரக்கப் பகுதிக்கு வந்து இறங்கும் லுப்தான்சா ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் சென்னையில் சரக்குகளை இறக்கிவிட்டு மீண்டும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு பகல் 12.55 மணிக்கு ஹாங்காங் புறப்பட்டு செல்லும். இன்று அந்த இரு சரக்கு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

இதனால் சென்னையில் இருந்து ஜெர்மன், அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு அனுப்பப்படும் சரக்குகள் முடங்கின.

இதையும் படிங்க:சென்னை ஐஐடி வரலாறு காணாத சாதனை.. 2023-ல் 300 காப்புரிமைகளைப் பெற்றது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details