தமிழ்நாடு

tamil nadu

“உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு குட்டு வைத்துள்ளது” - அமைச்சர் ரகுபதி பேச்சு! - Ponmudi as a minister

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 7:30 PM IST

Minister Regupathy criticized RN Ravi: பொன்முடியை அமைச்சராக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தமிழக ஆளுநருக்கு குட்டு வைத்துள்ளது எனக் கூறிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆனால் அவருக்கு வலிக்காது என்றும், ஏனென்றால் அவருக்கு இரும்பு தலை என நினைக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு
உச்ச நீதிமன்றம் தமிழக ஆளுநருக்கு குட்டு வைத்துள்ளது..ஆனால் அவருக்கு வலிக்காது

உச்ச நீதிமன்றம் தமிழக ஆளுநருக்கு குட்டு வைத்துள்ளது..ஆனால் அவருக்கு வலிக்காது

புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “சட்டமன்ற உறுப்பினராக உள்ள எவருக்கும் அமைச்சராகும் தகுதி உள்ளது. அமைச்சராக வேண்டும் என்பதற்கு தனியாக விதிகள் ஒன்றும் இல்லை. சட்டமன்ற உறுப்பினருக்கு உள்ள விதி தான் அமைச்சருக்கும் பொருந்தும். பொன்முடி அமைச்சராக அனைத்து தகுதிகளும் உள்ளது. எனவே அந்த தகுதியின் அடிப்படையில் தான் தமிழக முதல்வர் அவரை அமைச்சராக்க வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளார்.

இதற்கு சட்ட ஆலோசனை நடத்த வேண்டும் என்று ஆளுநர் பதிலளித்துள்ளார். அதற்குத்தான் உச்ச நீதிமன்றம் சரியாக குட்டு வைத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுடைய வழக்கறிஞரே ஆளுநருடைய செயல்பாடு கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். அப்பேர்ப்பட்ட ஆளுநர் தான் தமிழகத்தில் இருந்து கொண்டிருக்கிறார். ஆளுநரின் இது போன்ற செயல், தேர்தல் காலத்தில் கவலை அளிக்கிறது”, என கூறினார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, “விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெற உள்ள அமலாக்கத்துறை சோதனையானது, ஏற்கனவே நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் தொடர்ச்சி என்று தான் பார்க்க வேண்டும். இதனை மிரட்டல் என்று எடுத்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் குறைவு. விஜயபாஸ்கர் முக்கியமானவர், இவரும் பாஜகவிற்கு நெருங்கியவர் தான். எனவே அமலாக்கத்துறையின் சோதனையை அச்சுறுத்தும் கண்ணோட்டத்தோடு பார்க்கவில்லை.

அமலாக்கத்துறைக்கு எப்பொழுது ஞானோதயம் பிறக்கிறதோ அப்பொழுதுதான் வருவார்கள். எதிர்கட்சிகள் மீது நடத்திய சோதனை மிரட்டலுக்காக வந்த சோதனை. ஆனால் விஜயபாஸ்கர் மீது நடத்தப்படும் சோதனை ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நடத்தப்படும் சோதனை.

குட்கா ஊழல் குறித்து முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் ரமணா மீது விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது, எங்களுக்கு கிடைத்த வெற்றி. போதைப் பொருள் சம்பந்தப்பட்ட அரசு எடப்பாடி பழனிச்சாமி அரசாங்கமே தவிர, எங்களுடைய அரசு இல்லை என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. நாங்கள் போதைப் பொருளுக்கு உடந்தையாக இருக்கவில்லை. முந்தைய அரசாங்கமும், முன்னாள் அமைச்சர்களும் தான் உடந்தையாக இருந்துள்ளனர்.

தொடர்ச்சியாக தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநரை மத்திய அரசுதான் மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றவில்லை என்றால், இந்தியா கூட்டணி அரசு வெற்றி பெற்றவுடன் கண்டிப்பாக மாற்றப்படுவார். திமுகவின் தேர்தல் அறிக்கை அண்ணாமலைக்கு வேண்டுமானால் வெற்று காகிதமாக இருக்கலாம். இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் பயன்பெறும் வகையில் தான் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அது இந்த தேர்தலில் கதாநாயகனாக இருக்கும்.

திமுக வேட்பாளர் மட்டுமின்றி கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும், நாங்கள் பாடுபட்டு வாக்கு சேகரிப்போம். பாஜக மற்றும் அதிமுக பிரிந்துள்ளதால், அந்த வாக்குகளும் எங்களுக்கே வந்து சேரும். எனவே அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

மூத்த அமைச்சர் என்ற முறையில் எனது இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்துமேயானால், எனது வீட்டின் கதவுகளை திறந்தே வைத்திருப்பேன். எப்பொழுது வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம். நீதிமன்றம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் நான் பதில் அளித்து வருகிறேன். மற்ற அமைச்சர்கள் பேசாததால் அவர்கள் பயந்தவர்கள் அல்ல.

தேர்தல் களத்தில் புது முகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் பல லட்சம் வாக்குகளை வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். சரியான, தகுதி வாய்ந்த வேட்பாளர்களை தான் திமுக தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார். அதற்கு அனைவரும் கட்டுப்படுவார்கள்" என்றார்.

இதையும் படிங்க: கோவையில் அண்ணாமலை போட்டி.. வெளியானது தமிழ்நாடு பாஜக வேட்பாளர் பட்டியல்! - Annamalai From Coimbatore

ABOUT THE AUTHOR

...view details