தமிழ்நாடு

tamil nadu

தேர்தல் பத்திரம் ரத்து: வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு - கே.எஸ்.அழகிரி கருத்து..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 3:40 PM IST

KS Alagiri about Electoral Bond verdict: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் அரசியலில் வெளிப்படைத்தன்மையும், சமநிலைத் தன்மையையும் உருவாக்குகிற வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என இந்தியத் தேசிய காங்கிரசு தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

KS Alagiri about Electoral Bond verdict
தேர்தல் பத்திரமுறை ரத்து குறித்து கே.எஸ்.அழகிரி கருத்து

சென்னை: தேர்தல் பத்திரம் திட்டம் (Electoral Bond) சட்டப்பூர்வமானது என்பது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர். தற்போது இது பேசும் பொருளாக மாறியுள்ள நிலையில், தேர்தல் பத்திர முறை ரத்து குறித்து இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதாவது, கடந்த 2017 - 2018ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில், தேர்தல் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் நன்கொடை மூலம் வழங்கினாலும், அதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமோ அல்லது வேறு எந்த வகையிலோ எவரும் அறிந்து கொள்ள முடியாது.

இது முற்றிலும் வெளிப்படைத்தன்மையற்றதாக இருப்பதாகவும், ஆளும் ஒன்றிய பாஜக அரசு கார்ப்பரேட்டுகளுக்கு அரசு ரீதியாகச் செய்கிற உதவிகளுக்குச் சன்மானமாகத் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி குவித்து வருகிறது எனக் கடுமையான குற்றச்சாட்டைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. இதன்படி, 2018 முதல் 2022 வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய மொத்த நன்கொடை ரூ.9,208 கோடி. இதில் பாஜக மட்டும் ரூ.5,270 கோடி நிதியாகப் பெற்றிருக்கிறது. இது மொத்த நன்கொடையில் 57 சதவிகிதமாகும்.

அதேபோல, 2022 - 2023 ஆம் ஆண்டில், பாஜக தேர்தல் பத்திர நன்கொடையாக ரூ.2,120 கோடி பெற்றிருக்கிறது. இது மொத்த நன்கொடையில் 61 சதவிகிதமாகும். ஆனால், காங்கிரஸ் கட்சி ரூ.171 கோடி தான் பெற முடிந்தது. இத்தகைய சமநிலையற்ற தன்மையின் காரணமாகத் தேர்தல் அரசியலில் பாஜக, தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடைகளைக் குவித்து வருவதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் பத்திர திட்டம் சட்டவிரோதமானது, இதன்மூலம் நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் இன்று ஆணை பிறப்பித்துள்ளனர்.

ஒன்றிய அரசிடம் கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது. நன்கொடை தருவோர் குறித்த விவரங்களைப் பொதுவெளியில் தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்கள் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. எனவே, தேர்தல் நன்கொடை அளிக்க வகை செய்த அனைத்து சட்டத் திருத்தங்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்து தேர்தல் அரசியலில் வெளிப்படைத்தன்மையும், சமநிலைத்தன்மையையும் உருவாக்குகிற வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வரவேற்கிறேன். இதன்மூலம் ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கிற ஒன்றிய பாஜக, கார்ப்பரேட்டுகளின் உதவியோடு தேர்தல் நிதி குவிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தேர்தல்கள் சுயேச்சையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற உச்சநீதிமன்ற தீர்ப்பு உதவிக்கரமாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தேர்தல் பத்திரமுறை ரத்து - உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்!

ABOUT THE AUTHOR

...view details