தமிழ்நாடு

tamil nadu

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமர் பிரசாத் ரெட்டி; கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 10:31 AM IST

Case against Amar prasad reddy: பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக எழுந்த புகாரில், பாஜக நிர்வாகிகள் அமர் பிரசாத் ரெட்டி உட்பட நான்கு பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக பெண் நிர்வாகி தாக்கியதாக அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்கு
பாஜக பெண் நிர்வாகி தாக்கியதாக அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்கு

சென்னை: கோட்டூர்புரம் பாரதி அவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டாள். இவர் பாஜகவில் மாவட்ட துணை தலைவர் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகையை ஒட்டி, நடைபெற்ற விழாவுக்கு ஆட்களை அழைத்து வருவதில் ஆண்டாளுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாஜக பெண் நிர்வாகியான நிவேதா ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனை அடுத்து, கடந்த 21ஆம் தேதி நிவேதா, பாஜக நிர்வாகிகளான அமர் பிரசாத் ரெடி, ஸ்ரீதர், கஸ்தூரி ஆகியோர் ஆண்டாளின் வீட்டிற்குச் சென்று, அத்துமீறி உள்ளே நுழைந்து ஆண்டாள் மற்றும் அவரது சகோதரி இருவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் பாஜக நிர்வாகி ஸ்ரீதர், இந்த தகராறு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால், கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் ஆண்டாள் தரப்பில் கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து, ஆண்டாள் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி ஆண்டாள் மற்றும் அவரது சகோதரிகள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி,பாஜக சைதாப்பேட்டை கிழக்கு மண்டல துணைத் தலைவர் ஸ்ரீதர், பாஜக பெண் நிர்வாகி நிவேதா, கஸ்தூரி ஆகிய நான்கு பேர் மீதும் கோட்டூர்புரம் காவல் துறையினர் 8 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி வீடு புகுந்து தாக்குதல், கொலை மிரட்டல் விடுதல், காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனிடையே, சைதாப்பேட்டை பாஜக கிழக்கு மண்டல துணைத் தலைவர் ஸ்ரீதர் என்பவரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தொப்பூரில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து...3 பேர் உயிரிழப்பு! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details