தமிழ்நாடு

tamil nadu

ஜோதிமணி எம்.பிக்கு எதிராக போர் கொடி தூக்கும் காங்கிரஸ் கட்சியினர் - மீண்டும் சீட் வழங்கக்கூடாது என தீர்மானம்! என்ன காரணம்?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 8:49 PM IST

Jothimani: ஜோதிமணி எம்பி மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என காங்கிரஸ் கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Bank Subramanian
Bank Subramanian

பேங்க் சுப்பிரமணியன் பேட்டி

கரூர்:நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் தொகுதிப் பங்கீடு தொடர்பான, முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் கரூர் தொகுதியை ஒதுக்கீடு செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் கரூர் தாந்தோன்றிமலையில் உள்ள தனியார் திருமணம் மண்டபத்தில், கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டச் செயலாளர் சி.சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழகம் வரவிருக்கும் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகா அர்ஜுன கார்கேவிற்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற உழைப்பதது, கரூர் எம்.பி. எஸ்.ஜோதிமணி தொகுதியில் சரிவர பணியாற்றாமலும், பொதுமக்கள் மற்றும் சொந்த கட்சியினரிடம் சரியான அணுகுமுறை இல்லாத காரணத்தாலும், கூட்டணி கட்சியினரிடமும் வெறுப்புணர்வை ஏற்படுத்திய காரணத்தால் தொகுதி முழுவதும் அனைவரும் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

எனவே அவருக்குக் கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட இம்முறை வாய்ப்பு வழங்கக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் இடையே மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் ஜோதிமணி எம்.பியை வன்மையாகக் கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது குறித்து அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன், ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது "தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி மிகச் சிறப்பாக இருப்பதினால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடையும்.

கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட சிட்டிங் எம்பியான ஜோதிமணி விருப்ப மனு வழங்குவார் என்பதால், இன்று நடைபெற்ற கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், ஜோதிமணிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் தேசிய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பதால் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் தேர்தல் பணியாற்றக் காத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

கரூர் மக்களவைத் தொகுதியில் மீண்டும் ஜோதிமணி போட்டியிட முனைப்புக் காட்டி வரும் சூழ்நிலையில் சொந்தக் கட்சியினர் ஜோதிமணிக்கு எதிராக சீட் வழங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நிதிஷ் குமார் வெற்றி! ஆட்சியை தக்கவைத்தார்!

ABOUT THE AUTHOR

...view details