தமிழ்நாடு

tamil nadu

ஏ.வி.ராஜூ சர்ச்சை பேச்சு விவகாரம்: நடிகர் கருணாஸ் புகார்! யூடியூப் சேனல்களுக்கு சிக்கல்?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2024, 9:21 PM IST

AV Raju Controversy Speech Issue: அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார்.

AV Raju Controversy Speech Issue
ஏ.வி.ராஜூ சர்ச்சை பேச்சு விவகாரம்

சென்னை: அதிமுகவின் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜூ அண்மையில் நடிகை திரிஷா குறித்து வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக நடிகை திரிஷாவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசிய அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜூ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், "நான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் தற்போது முக்குலத்தோர் புலிகள் படை கட்சியின் நிறுவனராகவும் செயல்பட்டு வருகிறேன். நடிகர் சங்கத்திலும் துணைத் தலைவராக இருந்து வருகிறேன். இந்த நிலையில், அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜூ என்பவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் பொய்யான தகவலையும் என் மீது வன்மம் கொண்டு அவதூறாகவும் அருவருப்பான முறையிலும் மற்றும் உண்மைக்கு மாறான செய்தியைப் பரப்பி உள்ளார்.

மேலும், அதில் நடிகை திரிஷா பற்றியும் என்னைப் பற்றியும் உண்மைக்கு மாறாகப் பொய்யான பதிவை விளம்பரத்திற்காக அவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில் இமை அளவு உண்மை இல்லாத பொழுது அவர் கொடுத்த பேட்டி வீடியோ பல்வேறு தரப்பினரால் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.

தற்போது பல யூடியூப் சேனல்களிலும் என்னைப் பற்றியும் திரிஷா பற்றியும் பல்வேறு உண்மைக்கு மாறான பொய்யான அவதூறு கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். மேலும் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜூ எந்த ஆதாரமும் இன்றி கொடுத்த பொய்யான பேட்டியால் எனது பெயருக்கும் புகழுக்கும் சமுதாயத்தில் களங்கம் ஏற்படுத்தி உள்ளார்.

உண்மைக்கு மாறான பேட்டியின் காரணமாக நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே அவர் மீதும் பொய்யான தகவலை பரப்பும் யூடியூப் சேனல்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த வீடியோவை யூடியூப் சேனல்களில் இருந்து நீக்க வேண்டும்" என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கருணாஸ் கொடுத்த இந்த புகார் மனுவின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்க வலியுறுத்தி வலுக்கும் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details