தமிழ்நாடு

tamil nadu

காதலியைத் தாக்கிய கர்நாடக எஸ்.பி கோபியில் கைது.. பின்னணி என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 12:28 PM IST

Karnataka SP Arrested in Gobichettipalayam: காதலியைத் தாக்கிய கர்நாடக எஸ்.பி 5 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, கோபி போலீசாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Karnataka sp arrested in Gobichettipalayam
காதலியைத் தாக்கிய கர்நாடக எஸ்.பி கோபியில் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கருமாயா வீதியைச் சேர்ந்தவர் மாதேஷ்வரன். இவர் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது சித்த மருத்துவராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் அருண் ரெங்கராஜன் கடந்த 2012ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சட்டீஸ்கர் மாநிலத்தில் ஐபிஎஸ் ஆக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் அதே மாநிலத்தில், பணியாற்றிய இலக்கிய கருணாகரன் என்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இருவரும் பணியிட மாறுதலாக கர்நாடக மாநிலத்திற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், அருண் ரெங்கராஜன் கலபுர்கி மாவட்டத்தில் உள்பாதுகாப்பு பிரிவு கண்காணிப்பாளராக பணியாற்றிய போது, அதே மாவட்டத்தில் பணியாற்றிய உதவி சப் இன்ஸ்பெக்டர் சுஜாதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சுஜாதாவின் கணவர் கண்டப்பாவும் காவலராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் குறித்து சுஜாதா கணவர் அருண் ரெங்கராஜனின் மனைவியிடம் கூறி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அருண் ரெங்கராஜன், கண்டப்பாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கண்டப்பா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், அருண் ரெங்கராஜன் மீது அப்போது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அருண் ரெங்கராஜன் தார்வார் மாவட்ட உள் பாதுகாப்பு பிரிவு எஸ்.பி யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அருண் ரெங்கராஜனுக்கும், பெண் உதவி ஆய்வாளருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக, அவரது மனைவி இலக்கியா கருணாகரன், குழந்தைகளுடன் கணவரைப் பிரிந்து விவகாரத்து பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன், அருண் ரெங்கராஜன், சுஜாதாவுடன் கோபிசெட்டிபாளையத்திற்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த அருண் ரெங்கராஜன் சுஜாதாவைத் தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த சுஜாதா கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், சுஜாதா அளித்த புகாரின் அடிப்படையில், இந்தியத் தண்டனைச் சட்டம் 294 பி (ஆபாச வார்த்தையால் திட்டுதல்), 323 (கையால் தாக்குதல்), 324 (ஆயுதத்தால் தாக்குதல்), 506 / 2 (கொலை மிரட்டல்), பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அருண் ரெங்கராஜனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜய் அழகிரி, அருண் ரெங்கராஜனை சொந்த ஜாமீனில் விடுவித்தார். கர்நாடக மாநில எஸ்.பி கோபிசெட்டிபாளையத்தில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:பட்டினப்பாக்கத்தில் கட்டப்படும் புதிய மீன் அங்காடிக்கு கூடுதலாக ரூ.4.96 கோடி ஒதுக்கீடு - சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!

ABOUT THE AUTHOR

...view details