தமிழ்நாடு

tamil nadu

மீண்டும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவை தாக்கல் செய்தார் கனிமொழி !

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 4:47 PM IST

Kanimozhi MP: தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக கனிமொழி எம்.பி விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ளார்.

chennai
chennai

சென்னை: நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன.

அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவங்கள், கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர், ரூ.2 ஆயிரம் செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றனர். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி மாலை 6 மணிக்குள் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 5வது நாளாக படிவங்களைப் பூர்த்தி செய்து, ரூ.50 ஆயிரம் கட்டணத்துடன் ஏராளமான திமுக நிர்வாகிகள் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி விருப்ப மனுவை வழங்கினார். திமுக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்புச் செயலாளர் எஸ்.ஆஸ்டின், தலைமை நிலைய அலுவலக செயலாளர்கள் பூச்சி முருகன் மற்றும் துறைமுகம் காஜா ஆகியோரிடம் தனது விருப்ப மனுவை வழங்கினார்.

கனிமொழி எம்.பி உடன் அமைச்சர் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் இருந்தனர். முன்னதாக அறிவாலயத்திற்கு வந்த துணைப் பொதுச் செயலாளர் கனிமொழிக்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப‌ மனுத் தாக்கல் செய்ய உள்ளதை முன்னிட்டு, அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், கனிமொழி பெயரில் 80க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்களை அவருடைய ஆதரவாளர்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தென் மாவட்டம்; இசையமைப்பாளர் யார்?.. ஆர்.கே.சுரேஷ் - யுவன் மோதலின் பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details