தமிழ்நாடு

tamil nadu

நாளை முதல் மெரினாவில் உள்ள கலைஞர் உலகத்தை பொதுமக்கள் சுற்றி பார்க்கலாம்.. டிக்கெட் பெறுவது எப்படி?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 12:03 PM IST

Kalaignar Museum: கலைஞர் நினைவிடத்தில் உள்ள 'கலைஞர் உலகம்' அருங்காட்சியகத்தை, இணைய தளம் மூலம் அனுமதிச் சீட்டு பெற்று நாளை முதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

kalaignar museum in marina will be open to public from tomorrow said by tn govt
கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை நாளை முதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது

சென்னை: சென்னை மெரினாவில் புதிதாகக் கட்டப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடம், கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும், கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதோடு, கலைஞர் கருணாநிதியின் கலை, இலக்கிய, அரசியல் வாழ்க்கை வரலாற்றினை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், அந்நினைவிட வளாகத்தின் நிலவறையில் நவீன தொழில்நுட்பங்களுடன், பல்வேறு அரங்கங்கள் கொண்ட "கலைஞர் உலகம்" என்னும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தில், கலைஞரின் நிழலோவியங்கள், உரிமை வீரர் கலைஞர், கலைஞருடன் ஒரு புகைப்படம், புதிரை வெல் கலைஞர் வழிசெல், அரசியல் கலை அறிஞர் கலைஞர், கலைஞருடன் ஒரு நேர்காணல், நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி, பண்பாட்டுப் பேழை, கலைஞரின் வரலாற்றுச் சுவடுகள், கலைஞரின் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள், சரித்திர நாயகனின் சாதனைப் பயணம் போன்ற அரங்கங்கள் இடம் பெற்றுள்ளன.

அருங்காட்சியகத்திற்குள்பொதுமக்களுக்கு அனுமதி:இந்தக் கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தினைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு நாளை (மார்ச் 6) முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை, 6 காட்சிகளாக நடைபெறும். பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தைத் தேர்வுசெய்து முன்கூட்டியே அனுமதிச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்காட்சியினைக் காண வரும் பொதுமக்கள், காட்சி நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகைபுரிய வேண்டும் என்றும் கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பார்வையிட ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் வரை ஆகும் எனவும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிச் சீட்டு ஏதும் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி அனுமதிச் சீட்டு பெறுவது? :கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தினைப் பார்வையிடுவதற்கு தமிழக அரசின் https://www.kalaignarulagam.org/ என்ற இணைய முகவரி (Web Portal) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய முகவரியில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலைஞர் உலகத்திற்கான அனுமதிச் சீட்டு பெறுவதற்குக் கட்டணம் ஏதுமில்லை.

முற்றிலும் இலவசமாக இந்த அருங்காட்சியகத்தைப் பொதுமக்கள் கண்டு களிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில், ஒருவர் ஒரு தொலைபேசி எண்ணின் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சீப்பை மறைத்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா? - கரும்பு விவசாயி சின்னம் குறித்து நா.த.க காளியம்மாள் காட்டம்!

ABOUT THE AUTHOR

...view details