தமிழ்நாடு

tamil nadu

ஓபிஎஸ் 'X' தளத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்.. நீதிமன்றத்தை நாடிய அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 9:23 PM IST

OPS "X" Account: அதிமுகவில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம், தனது எக்ஸ் தளத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

OPS Twitter Account Issue
OPS Twitter Account Issue

சென்னை: அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவிற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யத் தாமதப்படுத்தியதை அடுத்து, அதிமுக-வின் பெயர், சின்னம், கொடி மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்னும் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என கூறி வருவதாகக் குற்றம் சாட்டினார்

மேலும், அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளே இல்லை என்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத ஒருவர் இன்னும் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என கூறுவதாகவும் தெரிவித்தார். இதுமட்டும் அல்லாது, மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சிக்குச் சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கைகளில் தலையிடுவது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.

இதனை அடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதத்திற்காக வழக்கு விசாரணையை, நீதிபதி என்.சதீஷ்குமார் மார்ச் மாதம் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:"காலமான சாந்தன்: இவர்களையாவது இலங்கை அனுப்புங்க" - ராஜிவ் கொலை வழக்கில் கோரிக்கை விடுக்கும் தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details