தமிழ்நாடு

tamil nadu

சென்னை பல்கலைக்கழக வங்கிக் கணக்கு முடக்கம்; அன்றாட பணிகளைச் செய்ய முடியாமல் தவிக்கும் நிலை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 8:24 PM IST

University of Madras: சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கை வருமான வரித்துறை முடக்கியதால், அன்றாடப் பணிகளைக் கூடச் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், அதனைத் தீர்க்க உயர் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

income tax department freeze University of Madras bank accounts
சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கி கணக்கு முடக்கம்

சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கி கணக்கு முடக்கம்

சென்னை: இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகமாகவும், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குத் தாய் பல்கலைக்கழகமாகவும் விளங்கி வரும் சென்னை பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது. அதிலிருந்து சமாளித்துக் கொள்வதற்குத் தொலைதூர கல்வி நிறுவனத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு ஊதியத்தை வழங்கி வந்தது. தமிழ்நாடு அரசிடம் தொடர்ந்து நிதி நிலையைச் சரி செய்வதற்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தின் வங்கிக் கணக்கு உட்படப் பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள 37 கணக்குகளை வருமானவரித்துறை முடக்கி உள்ளது. சென்னை பல்கலைக் கழகம் சுமார் 424 கோடி ரூபாய் வருமானவரி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளன.

உயர் கல்வித்துறை செயலாளர் தலைமையிலான நிர்வாகக் குழு வழிகாட்டுதல் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. சென்னை பல்கலைக்கழகம் வருமானவரித்துறைக்கு 424 கோடியே 67 லட்சம் நிலுவைத் தொகை செலுத்தப்படாமல் உள்ளது. கடந்த 2017-2018 நிதி ஆண்டு முதல் 2020 - 2021 நிதி ஆண்டு வரையிலான காலகட்டத்தில் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்கு அவகாசம் வழங்கிய போதும், அதனைச் செலுத்தாமலும், உரிய வகையில் விளக்கத்தை அளிக்காமலிருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. பணியாளர்கள் சம்பளம், பல்கலைக்கழகத்தின் மின் கட்டணம், பராமரிப்பு செலவுக்கும் வங்கிக் கணக்கு தேவையாக இருக்கிறது.

இது குறித்து உயர் கல்வித்துறை அதிகாரி கூறும்போது, “வரி கட்டாததும், காலதாமதம் ஆனதும் உண்மைதான். இதனால் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனர். வங்கிக் கணக்குகளை மீண்டும் பயன்படுத்த அனுமதி கடிதம் கொடுத்துள்ளோம். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை மாணவர்களின் நலம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் காந்தி ராஜ் கூறும்போது, “இந்தியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமாகவும், தாய் பல்கலைக்கழகமாக உள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாத சூழ்நிலையில் மிகவும் சிரமமாகச் செயல்பட்டு வருகிறது. அதனையும் தாண்டி அனைத்து வங்கிக் கணக்குகளும் மூடப்பட்டு உள்ளதாக வரும் தகவல் கல்வியாளர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

சென்னை பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் கொள்கை முடிவு எடுக்க முடியாத நிலையில், கன்வீனர் கமிட்டி மூலம் நிர்வகிக்கப்படுகிறது. நிதி நிலையிலும் முடக்கப்பட்டுள்ளது என்பது அதனுடைய வேலைப்பாடுகள் எவ்வாறு நடக்கும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே அரசு உடனடியாக தலையிட்டு இதன் கணக்கு வழக்குகளை அளித்து சென்னை பல்கலைக்கழகம் சுமுகமாகச் செயல்படுவதற்கான அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும்.

வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதன் மூலமாக ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மாணவர்களின் நலனைக் காக்கும் வகையில் 24ஆம் தேதி கல்வியியல் குழுவின் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை எவ்வாறு தயார் செய்யப்போகிறார்கள் என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

இந்த சூழ்நிலை சென்னை பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டுள்ளதைக் கண்டனத்திற்கு உரியதாகக் கருதுகிறோம். எனவே அரசு உடனடியாக தலையிட்டு மீண்டும் சரி செய்து உடனடியாக துணைவேந்தரையும் நியமித்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி வளர்க்கக் கூடிய செயல்களை மேற்கொள்ள வேண்டும்.

சென்னை பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே பணப்பலன்கள் கொடுக்கப்படாமல் உள்ளது. 2019ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்குப் பணப்பலன்கள் கொடுக்கப்படாமல் இருப்பது வருத்தத்திற்கு உரியது. அதனையும் தீர்க்க வேண்டும். பல்கலைக்கழகம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது அதற்கான நிதியைக் கொடுத்துச் சரி செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு முழுமையாக நிதியை அளிக்க வேண்டும்.

ஓய்வு பெறுபவர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கொடுக்க வேண்டிய பணப்பலன்கள் நிலுவையில் இருக்கும் போது, சுமை அதிகரித்துக் கொண்டு தான் செல்லும். பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர் உள்ளிட்ட பிற பணியாளர் இடங்களையும் நிரப்ப வேண்டும். ஆளுநர், அரசும் இணைந்து துணைவேந்தரை நியமிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறைக்கு நிதியை உயர்த்தி அளித்து, காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக எஸ்சி, எஸ்டி ஆசிரியர் சங்கம் மற்றும் சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு, “சென்னை பல்கலைக்கழகம் 2017 முதல் 2021 வரையிலான நிதி ஆண்டுகளில் மாநில அரசிடமிருந்து நிதி பெற இயலாததால் வருமான வரித்துறை தனியார் பல்கலைக்கழகமாகக் கருதி ரூபாய் 424 கோடியைக் கட்ட வேண்டும் என்று கூறி பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் 30க்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது.

இதன் காரணமாகப் பல்கலைக்கழகத்தில் அன்றாட இன்றியமையாத பணிகளைச் செய்ய முடியாத இக்கட்டான சூழலுக்கு வருமான வரித்துறை சென்னை பல்கலைக்கழகத்தைத் தள்ளியுள்ளது. தற்பொழுது சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கை முடக்கி வைத்துள்ளதால் விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல்; நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்!

ABOUT THE AUTHOR

...view details