தமிழ்நாடு

tamil nadu

“உச்சநீதிமன்றத்தால் எந்த ஆளுநரும் இப்படியான கண்டனத்துக்கு உள்ளாகி இருப்பார்களா?” - ஆர்.என்.ரவியை சாடிய ஸ்டாலின்! - MK STALIN ABOUT RN RAVI

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 9:54 PM IST

MK Stalin Speech about TN Governor RN Ravi: இந்தியா கூட்டணி ஆட்சி ஒன்றியத்தில் வந்தால் என்னென்ன திட்டங்களைச் செய்வோம் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுச் சொல்லி இருக்கிறோம் என தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், இதுவரை எந்த ஆளுநரும் உச்சநீதிமன்றத்தால் இந்த அளவுக்கு கண்டனத்துக்கு உள்ளாகி இருப்பார்களா என்பது சந்தேகம்தான் எனவும் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் ச.முரசொலி மற்றும் நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளர் வை.செல்வராஜ் ஆகியோரை அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசும்போது, "நம்முடைய கூட்டணி ஆட்சி ஒன்றியத்தில் வந்தால், இன்னும் என்னென்ன திட்டங்களைச் செய்வோம் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுச் சொல்லி இருக்கிறோம். சிலவற்றை மட்டும் தலைப்புச் செய்திகளாகச் சொல்கிறேன். இந்தியா முழுவதும் இருக்கும் விவசாயிகள், கூட்டுறவு அமைப்புகளிலும், வங்கிகளிலும் வாங்கியிருக்கும் கடனும் - வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்.

  • பெட்ரோல் – டீசல், கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்படும்.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-ல் இருந்து, 150 நாட்களாகவும், ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.
  • தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.
  • வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று சொல்லி விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.
  • ஈழத் தமிழர்களுக்கும், சிறுபான்மையின மக்களுக்கும் எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்.
  • பயிர்க் காப்பீட்டுக்கு உழவர்கள் செலுத்த வேண்டிய பங்குத்தொகையை ஒன்றிய அரசே செலுத்தும்.
  • காவிரி – தாமிரபரணி – வைகை ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டம் அறிவிக்கப்படும்.
  • ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், அலுவலகங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவது உறுதிசெய்யப்படும்.
  • வேளாண் விளைபொருட்களுக்கு மொத்த உற்பத்திச் செலவு + 50 விழுக்காடு என்பதை வலியுறுத்தி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்.
  • மாவட்ட அளவில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் கொள்முதல் மற்றும் விற்பனைச் சந்தைகள் அமைக்கப்படும்.
  • பட்டுக்கோட்டை – மன்னார்குடி, பட்டுக்கோட்டை – தஞ்சை இடையே புதிய இரயில் பாதைகள் அமைக்கப்படும்.
  • திருவாரூரில் இருந்து மதுரை, திருச்செந்தூர், பழனி ஆகிய இடங்களுக்கு இரயில் சேவைகள் ஏற்படுத்தப்படும்.
  • திருவாரூர் – சென்னைக்கு இடையே, பகல்நேர இரயில் சேவை ஏற்படுத்தப்படும்.
  • பட்டுக்கோட்டை இரயில் வழித்தடத்தில் கம்பன் எக்ஸ்பிரஸ் இரயில் மீண்டும் இயக்கப்படும்.
  • திருவாரூரில் தேசிய வேளாண் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
  • நாகைப் பகுதியில் சரக்குப் பெட்டகத் துறைமுகம் அமைக்க ஆவன செய்யப்படும்.
  • மீனவர்களுக்கு வாழ்வாதார உதவித்தொகையாக இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் நாட்களில் நாளொன்றுக்கு 500 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்.

இவ்வாறு இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் என்ன செய்யப் போகிறோம் – தமிழ்நாட்டுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று நான் வெளியிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.

தி.மு.க.வைப் பொறுத்தவரைக்கும், “சொல்வதைத்தான் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம்” இதுதான் வரலாறு, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை செய்து காட்டியிருப்பவன் தான், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்றார்.

தமிழ்நாடு ஆளுநர் குறித்து மு.க.ஸ்டாலின் கூறும்போது, "இவ்வளவு நாட்களாக எங்களை உசுப்பிவிட்டு – உற்சாகப்படுத்தி வந்தார், தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி. அவருக்கு நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் கடுமையான வார்த்தைகளால் எச்சரிக்கை கொடுத்திருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், அரசியலமைப்பையும் அவமதித்தால், அதை பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்கமாட்டோம் என்று நீதியரசர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதுவரை எந்த ஆளுநரும் உச்சநீதிமன்றத்தால், இந்த அளவுக்கு கண்டனத்துக்கு உள்ளாகி இருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

அவரே கடைசியில் களைத்துப் போய், நேற்று எங்களுக்கு அழைப்புவிடுத்து 3.30 மணிக்கு பதவிப்பிரமாணம் - வாருங்கள் - பொன்முடிக்கு பதவியேற்பு என்றார். அதை முடித்துவிட்டுத்தான் என் பயணத்தையே தொடங்கினேன். எனவே, ஆளுநர் மாளிகையில் இருந்துதான் என்னுடைய பிரச்சாரமே தொடங்கியிருக்கிறது.

ஆளுநர் மாளிகையிலிருந்து தொடங்கியிருக்கும் இந்த பிரச்சாரம், குடியரசுத் தலைவர் மாளிகை வரைக்கும் போகப்போகிறது. புறப்படும்போது, போய் வருகிறேன் என்று சொல்லிட்டு, இன்றைக்கு என்னுடைய பிரச்சாரப் பயணத்தை தொடங்குகிறேன் என்று சொல்லி ஆளுநருக்கு கை கொடுத்தேன். ‘ஆல் த பெஸ்ட்’ என்று அவரே சொன்னார்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளராக ஜான்சி ராணி அறிவிப்பு.. சிம்லா முத்துச்சோழன் மாற்றப்பட்டதன் பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details