தமிழ்நாடு

tamil nadu

சென்னை ஐஐடியில் அதிநவீன ஆய்வகங்களை பொதுமக்கள் பார்வையிட அனுமதி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 6:44 PM IST

IIT Madras: சென்னை ஐஐடியின் கல்வி நிறுவன திறந்தவெளி அரங்கு 2024 (Institute Open House 2024) நிகழ்வின்போது, அதிநவீன ஆய்வகங்களை மார்ச் 2, 3 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

சென்னை: அனைவருக்கும் ஐஐடிஎம் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, வருகிற மார்ச் 2, 3 ஆகிய தேதிகளில் வருடாந்திர எக்ஸ்போ கே.வி பள்ளியின் வளாகத்தில் நடைபெறுகிறது. அது மட்டுமல்லாமல், மாணவர்களால் இந்தியாவில் நடத்தப்படும் மிகப் பெரிய அமைப்புகளில் ஒன்றான சென்னை ஐஐடியின் புத்தாக்க மையம், வருகிற மார்ச் 3ஆம் தேதி அன்று சிஎப்ஐ திறந்தவெளி அரங்கு 2024 (Institute Open House 2024) நிகழ்வு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது. மேலும், ஐஐடிஎம் எக்ஸ்போவை பார்வையிட விரும்புவோர் வரும் 29ஆம் தேதிக்குள் shaastra.org/register என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இது குறித்து சென்னை ஐஐடி டீன் சத்தியநாராயண என் கும்மடி கூறுகையில், "மாணவர்கள் நடத்தும் இந்த முன்முயற்சியின்போது, ஐஐடிஎம்-இன் மேம்பட்ட ஆய்வகங்களை பொதுமக்களுக்கு காண்பிக்க இக்கல்வி நிறுவனம் முழு ஒத்துழைப்பையும் அளிக்கிறது. கல்வி நிறுவனத்தின் அழகான வளாகத்தை அனைவரும் பார்வையிடவும், எதிர்காலத் தலைவர்களாக பரிணமிக்கும் இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கவும் வாய்ப்பாக அமையும் எனக் கருதுகிறேன்.

ஆய்வகங்கள் மற்றும் உயர் சிறப்பு மையங்களைக் (CoEs) காட்சிப்படுத்தி, அதிநவீனத் தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கண்டு திளைக்கவும், முன்னணி ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எல்லையற்ற சாத்தியக் கூறுகளை ஆராயவும் அனைத்து தரப்பு ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பேரார்வம் கொண்டவர்களுக்கு இக்கல்வி நிறுவனம் அழைப்பு விடுக்கிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ரோபாடிக்ஸ் ஆய்வகம், உயிரி-மருத்துவ பொறியியல் ஆய்வகங்கள், ராக்கெட் மற்றும் ஏவுகணை ஆய்வகம், பாலிஸ்டிக் மற்றும் அதிவேக ஓட்ட ஆய்வகங்கள், 360 டிகிரி புல் பிரிட்ஜ் ஷிப் சிமுலேட்டர், மின்சார வாகன வேடிக்கை நிகழ்வு, கார்டியோவாஸ்குலர் ஜெனடிக்ஸ் லேப், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரங்கள், சிஎப்ஐ திறந்தவெளி அரங்கு, 3டி பிரிண்டிங் வசதிகள் உள்ளிட்டவை ‘அனைவருக்கும் ஐஐடிஎம்’ எக்ஸ்போவின் சிறப்பம்சங்களாகும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:4வது டெஸ்ட் போட்டி; ஆகாஷ் தீப் அசத்தல் பந்துவீச்சு.. ஜோ ரூட் சதம் விளாசல்!

ABOUT THE AUTHOR

...view details