தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 18 நாட்களில் 2 லட்சத்து 17 மாணவர்கள் சேர்க்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 19, 2024, 5:52 PM IST

Student admission in govt schools: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மார்ச் 1ஆம் தேதி தொடங்கிய நிலையில், மார்ச் 18ஆம் தேதி வரை 2 லட்சத்து 17 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 18 நாட்களில் 2 லட்சத்து 17 மாணவர்கள் சேர்க்கை
தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 18 நாட்களில் 2 லட்சத்து 17 மாணவர்கள் சேர்க்கை

சென்னை:தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் 31 ஆயிரத்து 336 பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 6 ஆயிரத்து 29 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்து, வழக்கத்தை விட இந்த ஆண்டு முன்னதாக மார்ச் 1ஆம் தேதி முதல் சேர்க்கைப் பணிகளை துவங்கியது.

தனியார் பள்ளிகள்: தனியார் பள்ளிகளின் நவீன தொழில்நுட்ப வசதிகள், பெற்றோருக்கு ஏற்பட்ட சமூக பாெருளாதார முன்னேற்றம் மற்றும் சமுதாய சூழல் காரணமாக, பெற்றோர் மாணவர்களை அதிகளவில் தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். மேலும், தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்க்கைக்கு கிராமப் பகுதிகளுக்குச் சென்று விளம்பரங்கள் செய்து வருகின்றனர். இதன் காரணமாக, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைவாக இருந்துள்ளது.

அரசுப் பள்ளிகள்: இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 6 ஆயிரத்து 29 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து கொண்டே இருந்துள்ளது. இதனால், இதற்கான காரணங்களை பள்ளிக்கல்வித்துறை ஆய்வு செய்தது.

திறன்மிகு வகுப்பறைகள்:ஆய்வின்படி,நடப்பாண்டில் 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (smart classroom) அமைக்கும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக செய்து வருகிறது. முதற்கட்டமாக காஞ்சிபுரம், கோவூரில் உள்ள தொடக்கப்பள்ளியில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 20ஆயிரம் தொடக்கப்பள்ளிகளில், திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

மேலும், 7 ஆயிரத்து 956 அரசு நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர் இறுதிச் செய்யப்பட்டு, கொள்முதல் செய்ய பணி உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பள்ளிகளின் வகுப்பறைகளை மாற்றி அமைத்து, பெயிண்ட் அடித்து, குழந்தைகளை கவரும் வகையில் மேஜை, நாற்காலிகள் மாற்றப்பட்டு புதியதாக அமைக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை:

கல்வியாண்டு அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை மொத்த மாணவர்கள் சேர்க்கை
2021-2022 2,56,637 மாணவர்கள் 1,10,621 மாணவர்கள் 3,67,258 மாணவர்கள்
2022-2023 2,21,703 மாணவர்கள் 94,924 மாணவர்கள் 3,16,627 மாணவர்கள்
2023-2024 1,88,579 மாணவர்கள் 78,355 மாணவர்கள் 2,66,934 மாணவர்கள்

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை:

கல்வியாண்டு தனியார் தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை தனியார் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை மொத்த மாணவர்கள் சேர்க்கை
2021-2022 1,50,671 மாணவர்கள் 18,830 மாணவர்கள் 1,69,501 மாணவர்கள்
2022-2023 1,23,605 மாணவர்கள் 14,748 மாணவர்கள் 1,38,353 மாணவர்கள்
2023-2024 1,32,814 மாணவர்கள் 19,443 மாணவர்கள் 1,52,257 மாணவர்கள்

அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, 2021 - 2022ஆம் கல்வியாண்டில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 686 என்று இருந்த நிலையில், 2023-2024ஆம் கல்வியாண்டில் 91 ஆயிரத்து 941 என குறைந்துள்ளது.

அரசின் நலத்திட்டங்கள்:இந்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை மார்ச் 1 ஆம் தேதி துவங்கி, அரசின் நலத்திட்டங்களாக காலை சிற்றுண்டி, வண்ண மயமான சீருடை, காலணிகள், உயர்கல்வி உதவித்தொகை, திறன்மிகு வகுப்பறை (smart classroom), ஆங்கில மொழி ஆய்வகம், கம்ப்யூட்டர் ஆய்வகம் உள்ளிட்டவற்றை பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி மாணவர்களின் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மேலும், அங்கன்வாடி மையங்களில் படிக்கும் 3 லட்சத்து 38 ஆயிரம் குழந்தைகளின் விரங்களும் பெறப்பட்டு, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் சேர்க்கைப் பணிகள் நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கையை 5 லட்சத்திற்கு மேல் உயர்த்தவும், பள்ளி மேலாண்மைக்குழு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அரசின் தீவிர நடவடிக்கையால் மார்ச் 1 ந் தேதி முதல் 18 ஆம் தேதி வரையில் 2 லட்சத்து 17 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்நிலையில், காலிப்பணியிடங்களில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்வற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் பணிகளை துவக்கியுள்ளது. அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா! என்ன காரணம்? ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகலா?

ABOUT THE AUTHOR

...view details